என் கேரக்டரைப் புரிஞ்சுக்கோங்க சார் - முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஈரோடு மண்ணிலிருந்து விஜய் நேரடி சவால்!
ஈரோடு விஜயமங்கலத்தில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் விஜய் ஆற்றிய உரை தமிழக அரசியலில் ஒரு பெரிய பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் இல்லாத வகையில் ஆளும் திமுக அரசை மிகக் கடுமையான சொற்களால் சாடிய விஜய், மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பயன்படுத்திய அதே 'அஸ்திரத்தை' கையில் எடுத்துள்ளார். "முன்னர் எதற்காக அவர்கள் இப்படிப் பேசினார்கள் என்று யோசித்தது உண்டு; ஆனால் இப்போதுதான் அது எனக்குப் புரிகிறது" என்று குறிப்பிட்ட விஜய், "திமுக ஒரு தீய சக்தி" என்று ஆவேசமாக முழங்கினார்.
தூய சக்தி VS தீய சக்தி:
மைதானத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான தொண்டர்களிடையே உரையாற்றிய விஜய், "திமுக ஒரு தீய சக்தி; அதை வீழ்த்த வந்த தூய சக்திதான் நமது தவெக. 2026-ல் நடக்கப்போகும் போட்டி தூய சக்திக்கும் தீய சக்திக்கும் தான். மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்த மக்கள் சக்தியான நம்மால் மட்டும்தான் முடியும்" என்று ஆணித்தரமாகக் கூறினார். மேலும், அதிமுக-வின் மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் தவெக-வில் இணைந்தது தங்களுக்கு மிகப்பெரிய பலம் என்றும், அவரைப் போல இன்னும் பல முக்கியப் புள்ளிகள் விரைவில் தவெக-வில் இணைய உள்ளதாகவும் அவர் ஒரு அரசியல் குண்டை வீசினார். அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைத் தனது கட்சி வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
முதலமைச்சருக்குப் பதிலடி:
அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் "என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேங்கிற" என்று சிலப்பதிகார வரிகளை மேற்கோள் காட்டிப் பேசியதற்கு விஜய் இன்று கிண்டலாகப் பதிலடி கொடுத்தார். "உங்களை எப்படித்தான் சார் புரிஞ்சுக்கிறது? சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதிலா? பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருப்பதிலா? அல்லது பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்ததிலா? எதுல சார் உங்க கேரக்டர புரிஞ்சுக்கிறது?" என்று அவர் சரமாரியாகக் கேள்வி எழுப்பினார். "முதலில் நீங்களும், ஒன்றியத்தில் ஆட்சி செய்பவர்களும் மக்களோட கேரக்டரைப் புரிஞ்சுக்கணும். 2026 தேர்தலோட கேரக்டரே வேற மாதிரி இருக்கும் சார்; நீங்க புரிஞ்சுக்கலைன்னா மக்கள் உங்களுக்குப் புரிய வைப்பாங்க சார்" என்று அவர் நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.
வெற்றி நிச்சயம் - நண்பா! தனது உரையின் இறுதியில், "தைரியமாக இருங்கள் மக்களே, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" என்று நம்பிக்கையூட்டிய விஜய், தனது ட்ரேட்மார்க் பாணியில் "நண்பா" என்று கூறி உரையை முடித்தார். ஈரோடு மண்ணில் இருந்து விஜய் விடுத்துள்ள இந்த நேரடிப் போர் முழக்கம், ஆளும் திமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பிற்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே வெப்பமடையத் தொடங்கிவிட்டது.
