புதுக்கோட்டையில் நயினார் நாகேந்திரன் யாத்திரை நிறைவு விழா: பிரதமர் மோடி - எடப்பாடி பழனிச்சாமி சங்கமம்!
தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாகக் கருதப்படும் பாஜக மற்றும் அதிமுக இடையிலான மெகா கூட்டணி, புதுக்கோட்டையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தின் மூலம் அதிகாரப்பூர்வமாகத் தனது பலத்தைக் காட்டத் தயாராகிவிட்டது. பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்கொண்டுள்ள 'தமிழகம் தலைநிமிரத் தமிழனின் பயணம்' பிரச்சார இயக்கத்தின் பிரம்மாண்ட நிறைவு விழாவுக்காக, புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளத்திவயல் பகுதியில் இன்று பந்தக்கால் முகூர்த்தம் கோலாகலமாக நடைபெற்றது.
சுமார் 49 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள இந்தப் பிரம்மாண்ட மேடைக்கான பணிகளைத் தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், "புதுக்கோட்டை மண்ணே குலுங்கும் வண்ணம் இந்த நிறைவு விழா அமையும். இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் தோன்றி எங்களின் ஒற்றுமையைப் பறைசாற்றுவார்கள்" என்று 'கெத்தாக' அறிவித்தார். அவரைத் தொடர்ந்து பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், "தமிழகத்தில் அதிமுகவும், இந்திய அளவில் பாஜகவும் மிகப்பெரிய இயக்கங்கள். இந்த இரு துருவங்களும் இணைந்துள்ள நிலையில், ஒரு தேர்தலில் கூடப் போட்டியிடாதவர்கள் முதலமைச்சராகக் கனவு காண்பது வெறும் வார்த்தை ஜாலம்தான். எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே இந்தத் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீடிப்பார்கள்" என்று கறாராகத் தெரிவித்தார்.
மேலும், தமிழக வெற்றிக் கழகத்தைத் கடுமையாகச் சாடிய தலைவர்கள், "திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிக்க வேண்டும் என்பதற்காகவே ஆளுங்கட்சியால் உருவாக்கப்பட்ட 'ஏ-டீம்' தான் தவெக" என்று குற்றம் சாட்டினர். திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக அரசு காட்டும் பிடிவாதம் சிறுபான்மையினரை ஏமாற்றும் செயல் என்றும், மதுரையில் உயிரிழந்த நபர் திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது அந்தக் கட்சியினருக்கே இந்த ஆட்சியின் மீதுள்ள அதிருப்தியைக் காட்டுகிறது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். ஜனவரி இரண்டாவது வாரத்தில் நடைபெறவுள்ள இந்தப் பொதுக்கூட்டம், தமிழக அரசியலில் ஒரு 'மெகா' மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது.
