ஏடிஎம்-க்கு வந்தவர் அளித்த தகவலால் தப்பிய ஊழியர்; 2 மணி நேர போராட்டத்திற்குப் பின் தீ அணைப்பு!
மதுரையின் இதயப் பகுதியான மேலமாரட் வீதியில் செயல்பட்டு வரும் எல்.ஐ.சி (LIC) கிளை அலுவலகத்தில் இன்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கிளை மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் இந்த அலுவலகத்தில், இரவு நேரம் என்பதால் பெரும்பாலானோர் பணி முடிந்து சென்ற நிலையில், இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்துள்ளது.
நிகழ்ந்தது என்ன? இன்று இரவு சுமார் 8 மணியளவில் எல்.ஐ.சி கட்டிடத்தின் உள்ளிருந்து கரும்புகை வெளியேறுவதை, அங்குள்ள ஏடிஎம் (ATM) மையத்திற்குப் பணம் எடுக்க வந்த நபர் ஒருவர் கவனித்துள்ளார். அவர் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்குத் தகவல் அளித்ததார். தகவலறிந்து பெரியார் மற்றும் திடீர் நகர் ஆகிய பகுதிகளிலிருந்து 4 தீயணைப்பு வாகனங்கள் ஜெட் வேகத்தில் சம்பவ இடத்திற்கு வந்தன. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தின் போது அலுவலகத்தின் உள்ளே இருவர் சிக்கிக் கொண்டது தெரியவந்தது. இதில் உதவி நிர்வாக அதிகாரி ராமு (32) என்பவர் தீக்காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டார். அவர் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இருப்பினும், இரண்டு மணி நேரத் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, கிளை மேலாளர் கல்யாணி நம்பி (55) என்பவர் சடலமாக மீட்கப்பட்டார். தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகையினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டோ அல்லது தீயில் கருகியோ அவர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த மேலாளரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தத் தீ விபத்திற்கான காரணம் மின் கசிவா (Short Circuit) அல்லது வேறு ஏதேனும் சதிச் செயலா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பரபரப்பான மேலமாரட் வீதியில் நடந்த இந்த உயிரிழப்புச் சம்பவம் மதுரை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
