பொங்கல் கொண்டாடப் பிரதமர் மோடி தமிழகம் வர வேண்டும்! - தமிழிசை சௌந்தரராஜன் விருப்பம்!
பாரதிய ஜனதா கட்சியின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரும், மேனாள் ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் கலாச்சாரத் திருவிழாவான பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழகம் வர வேண்டும் எனத் தாங்கள் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார். "பிரதமர் தமிழகம் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன; குறிப்பாகத் தமிழர்களின் பொங்கல் விழாவில் அவர் பங்கேற்பது பெருமைக்குரியதாக இருக்கும்" என்று அவர் ஆர்வத்துடன் குறிப்பிட்டார்.
வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்துப் பேசிய தமிழிசை, "பாஜக-வின் தேர்தல் பணிகள் டாப் கியரில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதற்காகப் பேச்சாளர் பயிற்சி முகாம்கள், பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் மற்றும் பல்வேறு பிரிவு சார்ந்த மாநாடுகள் அடுத்தடுத்துத் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளன. எங்கள் கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது. குறிப்பாக, ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டணியில் இணைவது குறித்த விவகாரங்களை டெல்லி மேலிடம் கவனித்து வருகிறது; அவர்கள் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுப்பார்கள்" என்று சஸ்பென்ஸ் வைத்தார்.
மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்ட மாற்றங்கள் குறித்துப் பேசிய அவர், "மத்திய அரசு வேலை நாட்களையும், ஊதியத்தையும் அதிகரித்துள்ளது. ஆனால், சிலர் திட்டத்தின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு தேவையற்ற அரசியல் செய்கிறார்கள். ராஜீவ் காந்தி பெயரில் விமான நிலையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன; காந்தியக் கொள்கைகளைக் காங்கிரஸ் மறந்துவிட்ட நிலையில், பிரதமர் மோடிதான் அதனை முழுமையாகப் பின்பற்றி வருகிறார்" என்று விளாசினார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும், தமிழக மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தனது பேட்டியில் தெளிவுபடுத்தினார்.
