90 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எரிப்பு; 2025-ல் ரூ. 3 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிப்பு!
தமிழக அரசு முன்னெடுத்து வரும் 'போதையில்லாத் தமிழ்நாடு' என்ற உன்னதக் கோட்பாட்டை நிலைநாட்டும் வகையில், ஆவடி காவல் ஆணையரகம் இன்று ஒரு மெகா நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆவடி மாநகரக் காவல் ஆணையாளர் திரு. கி. சங்கர், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படி, பல்வேறு சோதனைகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 510 கிலோ கஞ்சா இன்று அதிரடியாக எரித்து அழிக்கப்பட்டது. இதற்காக நியமிக்கப்பட்ட போதைப் பொருள் அழிப்புக் குழுவின் முன்னிலையில், நீதிமன்ற அனுமதியுடன் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
காவல் கூடுதல் ஆணையாளர் திருமதி K. பவானீஸ்வரி, இ.கா.ப., தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில், துணை ஆணையாளர் திரு. பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் தடய அறிவியல் துறை துணை இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கத்தில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனத்தின் 'இன்சுலேட்டர்' கருவியில், ஆவடி ஆணையரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 90 வழக்குகளில் சீஸ் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் இன்று மதியம் தீயிட்டு எரிக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் ஸ்பாட்டில் இருந்து பணிகளைக் கண்காணித்தனர்.
ஆவடி காவல் ஆணையரகத்தின் இந்த ஃபாலோ அப் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாகவே ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகின்றன. கடந்த 2024-ஆம் ஆண்டில் 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 399 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு 2025-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 581 வழக்குகளில் சிக்கிய சுமார் ரூ. 3 கோடி மதிப்புள்ள 2,892 கிலோ கஞ்சா எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் நடமாட்டத்தைத் தமிழகத்தில் முற்றிலுமாக ஒழிக்கத் தொடர்ந்து தீவிர சோதனைகள் மற்றும் கிடுக்கிப்பிடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் காவல் துறையினர் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
