மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்தின் புதிய முயற்சி; போலி மருந்துகள் குறித்து பொதுமக்கள் இனி நொடியில் புகார் அளிக்கலாம்!
தமிழகத்தில் போலி இருமல் மருந்துகள் மற்றும் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி மருந்துகள் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் ஒரு முக்கியப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் பொதுமக்கள் எளிதில் புகார் அளிக்கும் வகையில், கியூ.ஆர் (QR) கோடு வசதியுடன் கூடிய ஸ்டிக்கர்களை ஒட்ட வேண்டும் என்று மருந்து கடை உரிமையாளர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் போலி இருமல் மருந்து விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனம் மூடப்பட்டதுடன் அந்த மருந்திற்கும் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் பிரபல மருந்து நிறுவனங்களின் பெயரில் போலியான மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் பலரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த போலி மருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட பேட்ச் (Batch) மருந்துகளைத் தடை செய்ய மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருந்தது. இந்தச் சூழலில், சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இந்தத் புதிய டிஜிட்டல் புகார் முறையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த கியூ.ஆர் கோடு வசதியின் மூலம், மருந்துகளை வாங்கும் பொதுமக்கள் அவை போலியானவை என்று சந்தேகித்தாலோ அல்லது அந்த மருந்துகளை உட்கொண்ட பிறகு உடலில் ஏதேனும் எதிர்வினைகள் (Side effects) ஏற்பட்டாலோ, உடனடியாக ஸ்கேன் செய்து புகார் அளிக்க முடியும். இதற்கெனத் தனிச் செயலியை (App) உருவாக்கியுள்ள மருந்து கட்டுப்பாட்டு இயக்கம், புகார்களை உடனுக்குடன் பெற்று நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்த ஸ்டிக்கர்களை மருந்து கடைகளின் முகப்பில் வெளிப்படையாகத் தெரியும்படி ஒட்ட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முயற்சி போலி மருந்து மாஃபியாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
