ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க பாஜக ஆர்வம்; திட்டவட்டமாக மறுத்த அதிமுக தலைமை! இழுபறியில் கூட்டணிப் பேச்சுவார்த்தை!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையேயான அதிகாரப்பூர்வ முதற்கட்டப் பேச்சுவார்த்தை இன்று சென்னையில் நடைபெற்றது. சுமார் 9 மாதங்களுக்கு முன்பே கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இன்று நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையில் இரு தரப்புக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இழுபறி நீடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக தரப்பில் 70 தொகுதிகள் வரை கோரப்பட்டது அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அர்ஜுன் ராம் மேக்வால் ஆகியோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்தனர். அப்போது, பாஜக தரப்பில் 70 தொகுதிகள் வரை கேட்கப்பட்டதாகத் தெரிகிறது. இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, "கடந்த 2021 தேர்தலை விடச் சில இடங்களை மட்டுமே கூடுதலாக வழங்க முடியும். அதிமுக 160 முதல் 170 தொகுதிகளில் ‘இரட்டை இலை’ சின்னத்தில் போட்டியிடும்" எனத் தனது நிலைப்பாட்டில் உறுதியாகத் தெரிவித்துவிட்டார். இதனால் முதற்கட்டப் பேச்சுவார்த்தையிலேயே முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
கூட்டணியை வலுப்படுத்துவது குறித்துப் பேசிய பியூஷ் கோயல், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பத்தைத் தெரிவித்தார். ஆனால், இதற்குத் திட்டவட்டமாகத் தடை விதித்த எடப்பாடி பழனிசாமி, "அவர்களைத் தவிர்த்து மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேசலாம். அவர்களை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது" எனத் தெரிவித்துவிட்டார். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனைப் பாஜக தனது சொந்த ஒதுக்கீட்டில் சேர்த்துக் கொள்ள முன்வந்தும், அதிமுக தலைமை அதனை ஏற்க முன்வரவில்லை. இதனால் கூட்டணியை வலுப்படுத்தும் பாஜக-வின் முயற்சி தற்காலிகமாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளதால், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
