மனிதனுக்கும் நாய்க்குமான பாசப் போராட்டக்கதை; 'சினிகைண்ட்' விருதினைப் பெற்று இயக்குநர் நெகிழ்ச்சி!
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரும், தயாரிப்பாளருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கு, அவர் நடித்த ‘கூரன்’ திரைப்படத்திற்காகச் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட அவர், சினிமா மீதான தனது மாறாத காதலைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.
திரையுலகில் 45 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல வெற்றிப் படங்களைத் தந்துள்ள எஸ்.ஏ.சி, தற்போது நடிகராகவும் தனது முத்திரையைப் பதித்து வருகிறார். 'கூரன்' திரைப்படத்தில் ஒரு நாயுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்துப் பேசிய அவர், "சினிமா என்பது நான் சுவாசிக்கும் காற்று போன்றது. நான் ஓய்வெடுக்க நினைத்தாலும் அது என்னை விடுவதில்லை. இந்தப் படத்தில் ஒரு நாய்க்கும் மனிதருக்குமான உணர்வுப்பூர்வமான பாசத்தை வெளிப்படுத்தியது ஒரு மாறுபட்ட அனுபவமாக இருந்தது. ஒரு வாய் பேச முடியாத ஜீவனுக்கும் மனிதனுக்குமான பிணைப்பு அந்தப் படத்தில் அழகாகச் சொல்லப்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தார்.
ஃபிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் ‘பீப்பிள் ஃபார் அனிமல்ஸ்’ (People for Animals) ஆகிய அமைப்புகள் இணைந்து, சினிமாவில் அன்பை மையப்படுத்தி எடுக்கப்படும் படைப்புகளைக் கௌரவிக்கும் வகையில் 'சினிகைண்ட்' (Cinikind) விருதினை இவருக்கு வழங்கியுள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஐடிசி நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவில், எஸ்.ஏ. சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் கலந்துகொண்டு விருதினைப் பெற்றுக்கொண்டார். "நம்பிக்கையோடும் அர்ப்பணிப்போடும் உழைத்தால் சினிமா என்றும் கைவிடாது என்பதற்கும், அதற்கான அங்கீகாரம் தேடி வரும் என்பதற்கும் இந்த விருது ஒரு சாட்சி" என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
