சிறுபான்மையினருக்காகப் பேசியவர், பெரும்பான்மையினருக்காக ஏன் வாய் திறக்கவில்லை? - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜயை சாடிய அண்ணாமலை
தமிழக அரசியலில் ஹாட் டாப்பிக் ஆக உள்ள திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இதுவரை கருத்து தெரிவிக்காதது ஏன் என்று, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள் இன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் மத்தியில் நேரடியாகக் கேள்வி எழுப்பியதுடன், விஜய் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அரசியலில் கம்முனு இருக்கக் கூடாது; பேச வேண்டிய இடத்தில் பேசுங்கள் விஜய்” என்று காட்டமாகத் தொடங்கினார். “எவ்வளவு பிரச்சினைகள் நடக்குது... எவ்வளவு சண்டைகள் நடக்குது... நான் பேசவே மாட்டேன்... வேடிக்கை மட்டும் பார்ப்பேன் என்றால், உங்களை நம்பி எப்படி மக்கள் ஆட்சிப் பொறுப்பைக் கொடுப்பார்கள்?” என்று அவர் அக்ரோஷமாகக் கேள்வி எழுப்பினார். ஒரு விஷயம் தவறாக இருந்தால் தவறு என்று சொல்லுங்கள், சரியாக இருந்தால் சரி என்று ஓப்பனாகச் சொல்லுங்கள்; விஜய் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.
விஜய் முன்பு புதுவையில் ஒரு எம்.எல்.ஏ விவகாரத்தில், அவர் சிறுபான்மையினர் என்பதால் பொறுப்பு கொடுக்கவில்லை என்று பேசியதை நினைவுபடுத்திய அண்ணாமலை, “அதே விஜய், திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மையினருக்காக ஏன் பேசவில்லை?” என்று விஜய்யின் செயல்பாட்டில் உள்ளதாகக் கருதும் இரட்டை நிலைப்பாட்டை மக்கள் முன் சுட்டிக் காட்டினார். புதுவை மக்களும் விஜய்யின் இந்த மௌனத்தைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றும், புதுவை மக்களுக்கும் இதில் உள்ள உண்மை தெரியும் என்றும் அவர் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தார். “தேர்தல் களத்தில் நிச்சயம் மோதுவோம், ஆனால், நியாயமான விஷயத்தில் ஒன்றாக இருப்போம் என்பதுதான் விஜய் அவர்களுக்கு நான் சொல்லும் தாழ்மையான கருத்து” என்று கூறி அண்ணாமலை தனது அனல் பறக்கும் பேட்டியை முடித்துக் கொண்டார்.
