புனைப்பெயரில் 100-க்கும் மேற்பட்ட ஆர்டர்கள்; கோவை சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி ஆபரேஷன்; சதீஷ்குமார் கம்பி எண்ணுகிறார்!
கோவை: கோயம்புத்தூர் கணபதி பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, அவரது பெயரிலேயே நாள்தோறும் நூற்றுக்கணக்கான பார்சல்களை அனுப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய முன்னாள் நிறுவன உரிமையாளரை, மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 'டிஜிட்டல் மார்க்கெட்டிங்' உலகில் நடந்த இந்த சைபர் டார்ச்சர் சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் பெண் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் புலியகுளம் பகுதியில் உள்ள ஒரு டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
அங்கிருந்து வெளியேறிய அவர், தற்போது சுயமாக அதே துறையில் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவரது முகவரிக்கு 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் தினமும் 100-க்கும் மேற்பட்ட தேவையற்ற பார்சல்கள் குவியத் தொடங்கின. அந்தப் பார்சல்களுடன் ஆபாசக் கடிதங்களும் இடம்பெற்றிருந்ததால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகாரளித்தார்.
புகாரின் பேரில் களமிறங்கிய காவல்துறையினர், அந்த ஆன்லைன் ஆர்டர்களின் பின்னணியில் இருந்த ஐபி அட்ரஸ் மற்றும் தொழில்நுட்பத் தடயங்களை ஆய்வு செய்தனர். அதில், அந்தப் பெண் முன்பு பணியாற்றிய நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ்குமார் என்பது அம்பலமானது. கோவைப்புதூரில் வசித்து வரும் சதீஷ்குமார், அந்தப் பெண்ணின் வளர்ச்சியைப் பொறுக்காமல் புனைப்பெயரில் இந்த சைபர் அட்டாக்கை முன்னெடுத்தது உறுதியானது.
இதையடுத்து அவரை அதிரடியாகக் கைது செய்த காவல்துறையினர், அவரது செல்போனைப் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது அவர் கோவை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தொழில் போட்டியால் ஒரு பெண்ணுக்கு ஆபாசக் கடிதங்களுடன் தொல்லை கொடுத்த இந்தச் சம்பவம், தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு ஸ்ட்ராங் வார்னிங் ஆக அமைந்துள்ளது.
in
க்ரைம்