ஈழத்தமிழர் கட்சித் தலைவர்கள் சென்னையில் சந்திப்பு; கூட்டாட்சி முறையை உறுதி செய்ய இந்தியாவுக்குப் பாமக கோரிக்கை!
இலங்கையில் சிங்களப் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் ஒற்றையாட்சி முறையைத் திணிக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள், மீண்டும் ஒரு விடுதலைப் போருக்கே வழிவகுக்கும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அதிரடியாக எச்சரித்துள்ளார். இலங்கையில் தமிழர்களின் அரசியல் உரிமைகளைப் பறிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட உள்ளதாக எழுந்துள்ள தகவல்கள் ஈழத்தமிழர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்று இலங்கை தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய நிர்வாகிகள் அன்புமணி இராமதாஸை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எழுதிய முக்கியக் கடிதத்தையும் அவரிடம் வழங்கினர். இலங்கையில் தமிழர்களுக்குச் சிறிதளவு அதிகாரமும் கிடைக்காத வகையில் சிங்கள ஆட்சியாளர்கள் செய்து வரும் சதித்திட்டங்கள் குறித்து அவர்கள் விரிவாக விளக்கினர். இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "1987-ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையே தமிழர்களுக்குச் சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்துவதுதான். ஆனால், 13-வது சட்டத்திருத்தத்தை ஒரு பொம்மை போல மாற்றி, தமிழர்களை நான்காம் தர குடிமக்களாக மாற்றவே சிங்கள அரசு முயல்கிறது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அனுரா திசநாயக தலைமையிலான தற்போதைய அரசு தமிழர்களுக்கு எதிரான ஆபத்தான பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளதாகச் சாடியுள்ள அன்புமணி, "விடுதலைப் புலிகள் இயக்கம் வீழ்த்தப்பட்டிருக்கலாம், ஆனால் விடுதலைப் போருக்கான காரணங்கள் இன்றும் உயிர்ப்புடன் இருக்கின்றன. தமிழர்களின் இறையாண்மையைப் பறித்தால், அது ஒவ்வொரு ஈழத்தமிழரின் மனதிலும் உறங்கிக் கொண்டிருக்கும் போர் உணர்வுகளைத் தூண்டிவிடும்" என்று எச்சரித்துள்ளார். மேலும், இலங்கை அரசு நெருக்கடியில் சிக்கியபோதெல்லாம் உதவி செய்த இந்தியா, இப்போது தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கக்கூடாது என்றும், இலங்கையில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய கூட்டாட்சி முறையை உறுதிப்படுத்த இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
