மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டப் பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு; அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவித்ததாக நோட்டீஸ்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் புதிய மசோதாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை மாவட்டம் மேலூரில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், ஒன்றிய அரசின் புதிய மசோதாவைக் கடுமையாகச் சாடியதோடு, தனக்கு அனுப்பப்பட்டுள்ள மக்களவைச் செயலக நோட்டீஸ் குறித்து ஆவேசமாகப் பதிலளித்தார்.
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரமான நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றி, மாநில அரசின் பங்களிப்போடு 125 நாட்களாக மாற்றும் புதிய மசோதாவை ஒன்றிய அரசு அண்மையில் மக்களவையில் தாக்கல் செய்தது. இதற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று தமிழ்நாடு முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கண்டனப் போராட்டங்கள் நடைபெற்றன. மேலூரில் நடைபெற்ற போராட்டத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சு.வெங்கடேசன், "மக்களவையில் இந்த மசோதாவை 200-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எதிர்த்தோம். மக்களின் கோரிக்கைகளுக்காக அவையில் குரல் கொடுத்த என்னையும் சேர்த்து 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது, அவை நடவடிக்கைக்குக் குந்தகம் விளைவித்ததாக பாஜக எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் மக்களவைச் செயலகம் விளக்கம் கேட்டு எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜனநாயக ரீதியாகக் குரல் கொடுத்த எம்.பி.க்கள் மீது இது போன்ற நடவடிக்கை எடுப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயல்; இதனைச் சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை, சாப்பாட்டுத் தட்டைப் பெரிதாக்கிவிட்டு அதில் பரிமாறப்படும் உணவைக் குறைத்த கதைக்குச் சமமானது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
