ஆள் நடமாட்டமில்லாத வீட்டுக்குள் குட்டியைப் போட்டுச் சென்ற தாய் கருஞ்சிறுத்தை: வனத்துறையினரின் துணிச்சலான மீட்புப் பணியால் நிம்மதியடைந்த மக்கள்!
கோவை: கோயம்புத்தூர் மருதமலை அடிவாரப் பகுதியில் இன்று அதிகாலை அரங்கேறிய ஒரு சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதேசமயம் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மருதமலை மற்றும் கணுவாய் வனப்பகுதிகளில் அடிக்கடி தென்படும் அரிய வகை கருஞ்சிறுத்தை ஒன்று, இன்று அதிகாலை தனது குட்டியுடன் குடியிருப்பு பகுதிக்குள் ஊடுருவியுள்ளது. மருதமலை அடிவாரத்தில் உள்ள லெப்ரஸ் காலனி பகுதிக்குள் நுழைந்த அந்தப் பெரிய கருஞ்சிறுத்தை, அங்கிருந்த யாரும் வசிக்காத ஒரு பாழடைந்த வீட்டிற்குள் தனது குட்டியைப் பத்திரமாக வைத்துவிட்டு, பின்னர் அங்கிருந்து வனப்பகுதிக்குள் மறைந்து சென்றுள்ளது.
சிறிது நேரம் கழித்து அந்த வீட்டிற்குள்ளிருந்து வினோதமான சத்தம் கேட்பதை உணர்ந்த அக்கம் பக்கத்தினர், பயத்துடனே உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு அரிய வகை கருஞ்சிறுத்தையின் குட்டி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர். உடனே இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த உதவி வனப் பாதுகாவலர் விஜயகுமார் மற்றும் வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனத்துறையினர், கூண்டு மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு மின்னல் வேகத்தில் விரைந்து வந்தனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட அந்தச் சிறுத்தைக் குட்டி, கூண்டில் அடைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது.
தற்போது, மீட்கப்பட்ட அந்தக் குட்டியை அதன் தாயுடன் சேர்க்கும் சவாலான பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக வனப்பகுதியின் உட்பகுதியிலேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் குட்டியை விடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலேயே தாய்ச் சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்பதால், நிச்சயம் தாய் சிறுத்தை தனது குட்டியைத் தேடி வரும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். குட்டியைப் பிரிந்த தாய்ச் சிறுத்தை மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வரக்கூடும் என்பதால், லெப்ரஸ் காலனி பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அரிய வகை கருஞ்சிறுத்தையைக் குடியிருப்புக்கு அருகில் கண்டதும், அதன் குட்டியை வனத்துறையினர் பத்திரமாக மீட்டதும் கோவையில் இன்று பேசுபொருளாக மாறியுள்ளது.
in
தமிழகம்