ஒற்றை ஆட்சி முறையைக் கொண்டுவரத் துடிக்கும் சிங்கள அரசு! இந்தியா தடுத்து நிறுத்தக் கோரிக்கை!
இலங்கையில் தமிழர்களுக்குச் சுயாட்சி அதிகாரம் வழங்கும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராக, ஒற்றை ஆட்சி முறையை உறுதிப்படுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைக்க அந்நாட்டு அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு குறித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், 1948-ஆம் ஆண்டு இலங்கை விடுதலை அடைந்தது முதல் தமிழர்கள் இனம் மற்றும் மொழி அடிப்படையில் ஒடுக்கப்பட்டு வருவதையும், 1956-ஆம் ஆண்டின் 'சிங்களம் மட்டுமே' சட்டத்தினால் தமிழர்கள் மூன்றாம் தர குடிமக்களாக மாற்றப்பட்ட வரலாற்றையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1987-ஆம் ஆண்டு அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனா இடையே கையெழுத்திடப்பட்ட இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கமே தமிழர்களுக்குச் சுயாட்சி அதிகாரத்துடன் கூடிய கூட்டாட்சி முறையை ஏற்படுத்துவதுதான் என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார். "ஆனால், இந்த நோக்கத்தை நிறைவேற்ற விடாமல் தடுத்து வரும் சிங்கள அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று இலங்கையில் ஒற்றை ஆட்சி முறையை (Unitary Government System) நிலைநிறுத்தும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற முயல்கிறது. இது ஈழத்தமிழர்களுக்கு இனி எக்காலத்திலும் அரசியல் அதிகாரம் கிடைக்காமல் செய்துவிடும் நயவஞ்சகச் செயலாகும்" என அன்புமணி இராமதாஸ் சாடியுள்ளார்.
மேலும் அவர் தனது கடிதத்தில், "அனுரா திசநாயக தலைமையிலான தற்போதைய அரசு தமிழர்களுக்கு எதிரான ஆபத்தான பாதையில் பயணிக்கிறது. இலங்கை அரசு நிதி நெருக்கடி மற்றும் இயற்கை சீற்றங்களில் சிக்கிய போதெல்லாம் ஓடி வந்து உதவும் இந்தியா, தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கக் கூடாது. தமிழர்கள் வாழும் பகுதிகளில் தனித்துவமான இறையாண்மையுடன் கூடிய, சுயநிர்ணய உரிமை கொண்ட கூட்டாட்சி முறையே இன்றைய சூழலுக்குப் பொருத்தமான தீர்வாக இருக்கும். எனவே, ஒற்றை ஆட்சி முறையை ஏற்படுத்தும் சட்டத் திருத்தத்தைத் தடுத்து நிறுத்தவும், தமிழர்களுக்குச் சுயாட்சி வழங்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய இலங்கை அரசுக்கு இந்தியா அறிவுறுத்த வேண்டும்" எனத் தீவிரமாக வலியுறுத்தியுள்ளார்.
.jpg)