₹200 கோடி சொத்துவரி ஊழலைக் கண்டித்து அதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்; மேயர் தேர்தலை நடத்த வலியுறுத்தல்!
மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் ₹200 கோடி சொத்துவரி முறைகேடு மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இன்று மதுரையில் அனல் பறக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழங்காநத்தம் ரவுண்டானாவில் திரண்ட 500-க்கும் மேற்பட்ட அதிமுகவினர், திமுக அரசுக்கு எதிராக விண்ணதிரக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, மாநகராட்சி நிர்வாகத்தை ஊழலின் மொத்த உருவம் எனச் சாடினார்.
நிர்வாகச் சீர்குலைவும் ராஜினாமாவும்:
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா, மதுரை மாநகராட்சியின் தற்போதைய அவல நிலையை விலாவாரியாகப் பட்டியலிட்டார். "மதுரை மேயர் ராஜினாமா செய்து இரண்டு மாதங்கள் ஆகிறது; மண்டலத் தலைவர்கள் பதவியை விட்டுச் சென்று ஐந்து மாதங்கள் ஆகிறது. கடந்த மூன்று மாதங்களாக மாமன்றக் கூட்டம் கூட நடத்தப்படவில்லை. இதனால் மற்ற உறுப்பினர்களின் பதவியும் பறிபோகும் நிலை உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 80 நாட்களே உள்ள நிலையில், இப்போது மட்டும் மதுரையின் மீது அக்கறை காட்டுவது போல திமுக நாடகமாடுகிறது" என்று அவர் கிடுக்கிப்பிடி போட்டார். மேலும், 2026-ல் அதிமுக ஆட்சியே அமையும் என்றும், அதிமுக என்பது வெறும் கார் அல்ல, அது கோட்டைக்குச் செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் என்றும் அவர் மாஸாக முழங்கினார்.
செல்லூர் ராஜூவின் 'கலெக்ஷன் - கமிஷன்' அட்டாக்:
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டைத் திமுக குழிதோண்டிப் புதைத்துவிட்டது. இப்போது திமுக என்றால் Collection, Commission, Corruption என்று ஆகிவிட்டது. ஒரு திட்டத்திற்கு 7.5% முதல் 10% வரை கமிஷன் கேட்பதாக அமைச்சர்கள் மீது மக்களே புகார் கூறுகிறார்கள்" என்று அதிரடியாகக் குற்றஞ்சாட்டினார். மதுரைக்கு வர வேண்டிய மெட்ரோ மற்றும் டைடல் பார்க் திட்டங்களைத் திமுக தடுத்து வருவதாகவும், பி.டி.ஆர். போன்ற அமைச்சர்கள் மதுரையைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்துவோம் என்று கூறி வெறும் வாக்குறுதி அரசியலையே செய்வதாகவும் அவர் விளாசினார். 2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், இந்த 200 கோடி சொத்துவரி ஊழலில் ஈடுபட்ட அனைவரும் கம்பி எண்ணுவார்கள் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
ஊழலின் பின்னணி:
மதுரை மாநகராட்சியில் வரி விதிப்பு மென்பொருளை (UTIS) சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, பெரிய கட்டடங்களுக்கு வரியைக் குறைத்து நிர்ணயம் செய்ததன் மூலம் மாநகராட்சிக்கு ₹200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் மேயரின் கணவர் பொன் வசந்த் உட்பட 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊழல் காரணமாகவே மேயர் உள்ளிட்டோர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை உருவானது குறிப்பிடத்தக்கது. இன்றைய அதிமுகவின் இந்த எழுச்சி மிகு ஆர்ப்பாட்டம், மதுரை மாநகர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
