சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து அதிரடி ஆய்வு; தவெக பரப்புரை இடங்கள் தீவிர கண்காணிப்பு!
கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் ஏற்கனவே விசாரணையை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இன்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NDMA) உயர்நிலை உறுப்பினர்கள் கரூருக்கு வருகை தந்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், எதிர்காலத்தில் இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பாக வேலுச்சாமிபுரம் பகுதிக்கு முன்னதாகப் பரப்புரை நடத்தக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் ரவுண்டானா, லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை, ஆசாத் ரோடு மற்றும் 80 அடி சாலை உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் சிபிஐ அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வின் போது, குறிப்பிட்ட பகுதிகளில் மக்கள் கூடும் அளவு, பாதுகாப்பு வசதிகள் மற்றும் அவசர கால வெளியேறும் வழிகள் குறித்து அதிகாரிகள் விரிவான தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான மூலகாரணங்களை ஆராய்வதோடு, அரசியல் கட்சிப் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகளின் போது பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து இந்த ஆய்வறிக்கை முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
