ஈரோட்டில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த விஜய்; ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்றதாகச் செங்கோட்டையன் பெருமிதம்!
தமிழக அரசியல் களத்தில் 'பி-டீம்' அரசியல் குறித்த விவாதங்கள் அனல் பறந்து வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகக் குழுத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நோக்கி வீசியுள்ள விமர்சனக் கணைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு வருகை தந்த செங்கோட்டையன், அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஈரோட்டில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒரு மாநாடு போலச் சிறப்பாக நடைபெற்றது. இந்தப் பயணத்தில் தலைவர் விஜய் மக்கள் வெள்ளத்தில் மிதந்தார். இது ஒரு வரலாறு படைக்கிற நிகழ்ச்சியாக அமைந்திருக்கிறது. காவல்துறை இந்த நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியது. சுமார் ஒரு லட்சம் தொண்டர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்," என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குறித்துப் பேசிய அவர், "பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவின் பி-டீம் (B-Team) ஆகச் செயல்பட்டு வருகிறார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக அதிமுகவில் இணைந்து கொள்வதுதான் அவருக்குச் சரியானதாக இருக்கும்," என்று பகிரங்கமாகச் சாடினார். மேலும், தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி போல ஒரு பொற்கால ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே, அன்று ஜெயலலிதாவுக்குச் செங்கோல் வழங்கியது போலவே, இன்று தவெக தலைவர் விஜய்க்கும் தாம் செங்கோல் வழங்கியதாக அவர் விளக்கம் அளித்தார்.
விஜய்யின் எழுச்சி தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை விதைத்துள்ளதாகக் குறிப்பிட்ட செங்கோட்டையன், ஆன்மீக ரீதியாகவும் இந்த வெற்றிப் பயணம் தொடர விஜயாபுரி அம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார். செங்கோட்டையனின் இந்தப் பேட்டி, குறிப்பாக நயினார் நாகேந்திரன் குறித்த அவரது கருத்து, அதிமுக மற்றும் பாஜக வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
