ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் பயங்கரம்: நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழப்பு!
புனிதத் தலமான ஸ்ரீரங்கத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதியில், தங்கியிருந்த நான்கு பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேர் ஆன்மீகப் பயணமாகத் திருச்சிக்கு வந்து, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். நேற்று இரவு வரை இயல்பாக இருந்த இவர்கள், இன்று காலை நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் கதவைத் தட்டியும் பதில் வராததால், மாற்றுச் சாவி மூலம் அறையைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்து போயினர். அறையில் தங்கியிருந்த நான்கு பேரும் சடலமாகக் கிடந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த திருச்சி மாநகர ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களைக் கைப்பற்றினர். உயிரிழந்தவர்கள் விஷம் அருந்தினார்களா அல்லது மூச்சுத் திணறல் போன்ற ஏதேனும் விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. யாத்ரி நிவாஸில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் தங்கும் விடுதிப் பதிவேடுகளைக் கொண்டு போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
