25 ஆண்டுகளாகப் பணியாற்றிய இடத்தில் சோகம்; கடன் தொல்லை காரணமா? போலீஸ் தீவிர விசாரணை!
சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில், வேதியியல் ஆய்வக ஊழியர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கல்வி நிறுவன வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீவ் (51). இவர் அமைந்தகரையில் உள்ள வின்சென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 25 ஆண்டுகளாக வேதியியல் ஆய்வக உதவியாளராகப் பணியாற்றி வந்தார். நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற ஸ்டீவ், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ரோஸ்மேரி பலமுறை தொலைபேசியில் அழைத்தும் ஸ்டீவ் எடுக்காததால் பதற்றமடைந்த குடும்பத்தினர், உடனடியாகப் பள்ளிக்கு விரைந்தனர்.
பள்ளியில் ஸ்டீவ் பணியாற்றும் வேதியியல் ஆய்வகக் கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, ஆய்வகத்தில் உள்ள மின்விசிறியில் டேபிள் துடைக்கும் துணியால் ஸ்டீவ் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு கதறித் துடித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அமைந்தகரை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், ஸ்டீவ் கடந்த சில காலமாகக் கடுமையான கடன் பிரச்சினையில் இருந்ததாகத் தெரியவந்துள்ளது. மேலும், அவருக்கு முடக்கு வாதம் நோய் இருந்ததால் அதற்காகக் கே.கே. நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். உடல்நலக் குறைவு மற்றும் கடன் சுமை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. 25 ஆண்டுகள் பணியாற்றிய அதே ஆய்வகத்திலேயே அவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சக ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
