மஞ்சள் நகரம் கண்டுபிடிப்பு வேடிக்கையானது; நடிகர் விஜய்க்குத் தமிழிசை சௌந்தர்ராஜன் பதிலடி!
கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக அரசியல் களம், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி மற்றும் நடிகர் விஜய்யின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் குறித்துத் தனது அதிரடியான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
கோவையில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசுகையில், தற்போதைய அரசியல் சூழலில் பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது என்று திட்டவட்டமாகக் கூறினார். "தி.மு.க அரசு ஆட்சியில் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு வருகிறது" என்று குற்றம்சாட்டிய அவர், 2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிச்சயம் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனத் தனது நம்பிக்கையைத் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவையை "மஞ்சள் நகரம்" என்று குறிப்பிட்டதற்குத் தமிழிசை கடும் பதிலடி கொடுத்தார். கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் குறித்து பா.ஜ.க-வுக்கு நீண்டகாலமாகவே நன்றாகத் தெரியும். சிலர் இப்போது புதிதாக வந்து கோவையை 'மஞ்சள் நகரம்' எனக் கண்டுபிடித்துப் பேசுவது வேடிக்கையாக உள்ளது. உண்மையில் மஞ்சளுக்கெனத் தனி வாரியம் (Turmeric Board) அமைத்துக் கொடுத்ததே பா.ஜ.க தான்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.
"விஜய் டிக்கெட் வாங்கித்தான் மக்கள் இணைப்பை ஏற்படுத்தி இருக்கிறார். எனினும், அவரது தி.மு.க எதிர்ப்பை நான் வரவேற்கிறேன். தி.மு.க ஒரு 'தீய சக்தி' என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை; அந்தச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இப்போது விஜய்யும் தள்ளப்பட்டுள்ளார்," என்று அவர் விமர்சித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடினார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒரு உயிர் பறிபோயுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு கண்டிப்பாகப் பதில் சொல்லியே ஆக வேண்டும். இதில் முதலமைச்சருக்கு ஒருவித 'ஈகோ' (Ego) பிரச்சினை இருப்பதாகத் தெரிகிறது என்று தமிழிசை சாடினார்.
இந்துக்களின் உணர்வுகள் தொடர்ந்து புண்படுத்தப்படுவதாகவும், இதற்கு 2026 தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்றும் அவர் எச்சரித்தார். "விமான நிலையங்கள், துறைமுகங்கள் மற்றும் சாலை விரிவாக்கங்கள் பற்றித் தெரியாமல் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். அவர் எதைப் புரிந்து கொண்டு பேசுகிறார்?" என்று கேள்வி எழுப்பினார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் (MGNREGA) அதிக ஊழல் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு திகழ்வதாகத் தமிழிசை குற்றம்சாட்டினார்.
தமிழிசை சௌந்தர்ராஜனின் இந்தப் பேட்டி, தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியின் முக்கியத்துவத்தையும், புதிய வரவான விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்த பா.ஜ.க-வின் நிலைப்பாட்டையும் தெளிவாக உணர்த்தியுள்ளது.
