சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை; கல்வி நிதியை ஒதுக்காமல் வஞ்சித்த மத்திய அரசுக்குக் கண்டனம்!
பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகளை நடத்தி, அவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கக் கூடாது எனத் தனியார் பள்ளிகளுக்குத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற சிறந்த கல்வியாளர்களுக்கான விருது வழங்கும் விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மாணவர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
திருச்சி காஜாமலையில் உள்ள தமிழ்நாடு ஹோட்டலில் சிறந்த கல்வியாளர் சாதனை விருது வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "பள்ளி விடுமுறை என்பது மாணவர்கள் தங்களை அடுத்தகட்டப் பாடங்களுக்குப் புத்துணர்ச்சியுடன் தயார்படுத்திக் கொள்வதற்காகத்தான். அந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது. இதனைத் தனியார் பள்ளிகள் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்; மீறினால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மேலும், தமிழகத்தின் கல்வி உள்கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், "திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை 9,416 புதிய வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன; 7,898 வகுப்பறைகள் கட்டும் பணி 'சுறுசுறுப்பாக' நடைபெற்று வருகிறது. பாழடைந்த கட்டிடங்களை இடிக்கத் தொடர் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. புதிய கட்டிடங்கள் கட்டப்படும் வரை, மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்கச் சமுதாயக் கூடங்கள் அல்லது வாடகை கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார். அதேசமயம், ஒன்றிய அரசின் பாரபட்சமான போக்கைச் சாடிய அமைச்சர், "கல்விக்கான இலக்குகளை எட்டுவதில் தமிழகம் முன்னிலையில் இருந்தும், நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு அரசியல் செய்கிறது. கேரளா மற்றும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை முடக்கி வஞ்சிப்பது வேதனைக்குரியது. நிதி நெருக்கடி இருந்தாலும், முதலமைச்சர் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கல்விக்கான நிதியைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்" என்று தனது குற்றச்சாட்டையும் பதிவு செய்தார்.
.jpg)