ரூ.2 லட்சம் மதிப்பிலான ஆடுகள் ரத்த வெள்ளத்தில் உயிரிழப்பு - மிரட்சியில் துட்டம்பட்டி பகுதி விவசாயிகள்!
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள துட்டம்பட்டி பைபாஸ் செட்டிகாடு பகுதியில் இன்று காலை அரங்கேறிய கோரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவர் தனது பட்டியில் வளர்த்து வந்த 11 ஆடுகளை, அடையாளம் தெரியாத மர்ம விலங்கு ஒன்று நள்ளிரவில் கடித்துக் குதறியதில் அவை அனைத்தும் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்கப் பலியாகின. இன்று அதிகாலை வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காகப் பட்டிக்குச் சென்ற ராஜேந்திரன், ஆடுகள் அனைத்தும் ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். உயிரிழந்த 11 ஆடுகளின் மொத்த மதிப்பு சுமார் 2 லட்ச ரூபாய் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, அக்கம் பக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உயிரிழந்த ஆடுகளைப் பார்வையிட்டதுடன், பெரும் நஷ்டத்தைச் சந்தித்துள்ள விவசாயி ராஜேந்திரனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். கடந்த இரண்டு மாத காலமாகவே துட்டம்பட்டி பைபாஸ் பகுதிகளில் இது போன்ற மர்ம விலங்குகளின் நடமாட்டமும், ஆடுகள் பலியாவதும் தொடர்கதையாகி வருவது விவசாயிகளிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பகுதி மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடத் தயங்கும் சூழல் உருவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குச் சென்று இந்த விவகாரம் குறித்து முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து, தாரமங்கலம் நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், இறந்து கிடந்த ஆடுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆடுகளைக் கடித்தது சிறுத்தையா அல்லது வெறிபிடித்த நாய்களா என்பது குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மர்ம விலங்கைப் பிடிக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தாரமங்கலம் பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
in
தமிழகம்