6-வது ஆண்டில் 'மார்கழியில் மக்களிசை'; டிசம்பர் 26 முதல் பச்சையப்பன் கல்லூரியில் பிரம்மாண்ட இசைத் திருவிழா!
நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும் 'மார்கழியில் மக்களிசை' நிகழ்ச்சியின் ஆறாவது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் டிசம்பர் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற உள்ளது. இது குறித்த அறிமுகச் சந்திப்பில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், இந்த மேடை வெறும் இசைக்கானது மட்டுமல்ல, இது மக்களின் சமூகச் சிக்கல்களைப் பிரதிபலிக்கும் திருவிழாவாக உருவெடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
எழும்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "நீலம் அமைப்பின் மூலம் தொடங்கப்பட்ட இந்த முயற்சி இன்று வெகுமக்களின் திருவிழாவாக மாறியுள்ளது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த அறிவிப்புக்காகக் காத்திருப்பதைக் காணும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மார்கழியில் மக்களிசை ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் இது நம்மிடையே இருக்கும் சமூகச் சிக்கல்களை விவாதிக்கும் தளமாகவும், மக்களின் உண்மையான அடையாளமாகவும் மாறும். இதுவரை தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் எனப் பல இடங்களில் திறந்தவெளி மைதானங்களில் இந்த இசை முழங்கியுள்ளது" என்று குறிப்பிட்டார்.
இந்த ஆண்டு நடைபெறும் நிகழ்ச்சியில் 550 தனி இசைக்கலைஞர்கள், 20 இசைக்குழுக்கள் என 6 மொழிகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்கின்றனர். நாட்டுப்புற இசை, கானா, ஒப்பாரி, பழங்குடி இசை, ராப் மற்றும் ஹிப்-ஹாப் என பல்வேறு இசை வடிவங்கள் ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளன. மேலும், இந்த விழாவில் மூத்த கலைஞர்களான தருமா அம்மாள், மூர்த்தி உள்ளிட்ட 19 பேருக்கு 'மக்களிசை மாமணி' என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. அரசியல் மற்றும் தேர்தல் குறித்த கேள்விக்கு நகைச்சுவையாகப் பதிலளித்த ரஞ்சித், "தற்போது படங்கள் தயாரிப்பதில்தான் கவனம் செலுத்தி வருகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் அரசியல் கட்சி தொடங்கினால் 234 தொகுதிகளையும் கேட்பேன்" என்று சிரித்தபடி கூறினார். திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் பலரும் பங்கேற்று இந்த இசைத் திருவிழாவைச் சிறப்பிக்க உள்ளனர்.
