6,500 கிலோ எடையுள்ள ‘ப்ளூ பேர்ட்’ செயற்கைக்கோளுடன் சீறிப்பாயும் LVM3-M6 ராக்கெட்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது வரலாற்றிலேயே மிக முக்கியமான மற்றும் பிரம்மாண்டமான வணிக ரீதியான ஏவுதலை நாளை முன்னெடுக்க உள்ளது. இஸ்ரோவின் அதீத சக்திவாய்ந்த ராக்கெட்டான LVM3-M6 மூலம், சுமார் 6,500 கிலோ எடை கொண்ட 'ப்ளூ பேர்ட் பிளாக்-2' (BlueBird Block-2) என்ற அடுத்த தலைமுறை தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நாளை காலை 8:54 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து நாளை நடைபெறவுள்ள இந்த ஏவுதலில், அமெரிக்காவின் 'ஏ.எஸ்.டி ஸ்பேஸ் மொபைல்' (AST SpaceMobile) நிறுவனத்திற்குச் சொந்தமான இந்தச் செயற்கைக்கோள் புவி தாழ்வட்டப் பாதையில் (LEO) நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்திய மண்ணிலிருந்து ஏவப்படும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் இது என்பதால், உலக நாடுகளின் பார்வை தற்போது இந்திய விண்வெளித் துறையின் மீது திரும்பியுள்ளது. பூமியில் செல்போன் கோபுரங்கள் இல்லாத மிகவும் பின்தங்கிய மற்றும் தொலைதூரப் பகுதிகளில் கூட, நேரடியாகச் செயற்கைக்கோள் வழியாக அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்குவதே இந்தத் தொழில்நுட்பத்தின் பிரதான நோக்கமாகும்.
முன்னதாக GSLV Mk III என அழைக்கப்பட்ட LVM3 ராக்கெட், சுமார் 43.5 மீட்டர் உயரமும், 640 டன் எடையும் கொண்ட இந்தியாவின் நம்பிக்கைக்குரிய 'பாகுபலி' ராக்கெட்டாகும். இது இந்தியாவின் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்காகச் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டது. நாளை விண்ணில் பாயும் இந்தச் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள மிகப்பெரிய ஆண்டெனா அமைப்பு மூலம், செல்போன் கோபுரங்கள் இல்லாமலேயே நேரடியாக மொபைல் இணைப்பைப் பெற முடியும். இந்தச் சாதனை மூலம் சர்வதேச விண்வெளி வர்த்தகச் சந்தையில் கனரக செயற்கைக்கோள்களை ஏவுவதில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது.