பாஜக-வின் மிரட்டல் அரசியலுக்குத் திராவிட இயக்கம் அஞ்சாது; 2026-ல் உதயசூரியன் மீண்டும் உதிக்கும் எனப் பிரகடனம்!
சினிமாவில் மின்னும் நட்சத்திரங்கள் எல்லாம் உதயசூரியன் ஆகிவிட முடியாது என்றும், வானத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருந்தாலும் தனித்து ஒளிர்வது சூரியன் மட்டுமே என்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். சென்னை மணலியில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மாற்றுக் கட்சியினரையும், சினிமா பின்னணி கொண்ட அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
சென்னை மணலி சின்னசேக்காடு பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில், சுமார் ஆயிரம் பேருக்குத் தையல் இயந்திரங்கள் மற்றும் புத்தாடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். பின்னர் மேடையில் உரையாற்றிய அவர், "இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த வேண்டும் என்று ஒன்றியத்தில் உள்ள பாஜக-வினர் பல நாடகங்களை ஆடுகிறார்கள். தங்களுக்கு ஆகாத சக்திகளை மிரட்டி உருட்டி, திமுக-விற்கு எதிராக எதிர்விளையாட்டு விளையாடத் தூண்டுகிறார்கள். மற்றவர்களை மோதவிட்டு, அதில் வழியும் ரத்தத்தை நக்கிப் பிழைக்கும் புத்தி பாஜக-விற்கு உண்டு. ஆரிய - திராவிடப் போராட்டம் என்பது தமிழகத்தில் காலங்காலமாக உண்டு, இதில் திராவிடமே வெல்லும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் எதிர்க்கட்சிகளைச் சாடிய அவர், "ஒரு பக்கம் சினிமா கூட்டம், ஒரு பக்கம் ஆரியக் கூட்டம், மறுபக்கம் துரோகக் கூட்டம், இன்னொரு பக்கம் அடிமைக் கூட்டம் எனப் பலமுனைத் தாக்குதல்கள் திமுக-வின் மீது ஏவப்படுகின்றன. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைப் பற்றி நாகரிகம் இல்லாமல் பேசுவதுதான் அரசியலா? இந்த அனைத்துக் கூட்டங்களிலிருந்தும் நாட்டை விடுவிக்க 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் உதயசூரியன் உதிக்க வேண்டும். சினிமாவில் மின்னும் நட்சத்திரங்கள் எல்லாம் சூரியனாக முடியாது என்பதை மக்கள் உணர்த்துவார்கள்" எனப் பேசினார். இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி. சங்கர், சுதர்சனம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.
.jpg)