இந்துக்கள் மண்டையில் கொட்டுவதே இவர்களுக்கு வேலையாகிவிட்டது! எய்ம்ஸ் விவகாரத்தில் விசிக-வுக்குப் பதிலடி!
சென்னையில் சுனாமி நினைவு தினத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய பாஜக மாநிலத் துணைத்தலைவர் குஷ்பு, விசிக தலைவர் திருமாவளவனின் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெஜாரிட்டி இந்துக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து காயப்படுத்துவதே சில அரசியல் தலைவர்களின் வாடிக்கையாகிவிட்டது என்று சாடிய அவர், தேர்தல் நேரத்தில் கோவில்களுக்குச் செல்வதைத் திருமாவளவன் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2004-ஆம் ஆண்டு இதே நாளில் ஆழிப்பேரலை சுனாமியால் உயிரிழந்தவர்களின் 21-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் தமிழக பாஜக சார்பில் மாநிலத் துணைத்தலைவர் குஷ்பு மற்றும் மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் ஆகியோர் மலர் தூவியும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து மீனவ மக்களுக்கு உணவுகளை வழங்கிய பின் குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, "திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா?" என விசிக தலைவர் திருமாவளவன் எழுப்பிய கேள்விக்குக் குஷ்பு காரசாரமாகப் பதிலளித்தார். அவர் கூறுகையில், "திருமாவளவனின் மனநிலை இதுதான். ரம்ஜான் அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடினால் எய்ம்ஸ் மருத்துவமனை வந்துவிடுமா என அவரால் கேட்க முடியுமா? மெஜாரிட்டி இந்துக்கள் என்பதால் தொடர்ந்து அவர்கள் தலையில் கொட்டுவதையே வேலையாக வைத்துள்ளனர். இவர்களது கூட்டணியில் உள்ளவர்கள் நாலு சுவற்றுக்குள் பட்டை பூசி பூஜை செய்வார்கள். ஆனால் வெளியில் இப்படிப் பேசுவார்கள். வரும் தேர்தலில் எந்தக் கோவிலுக்கும், மசூதிக்கும், சர்ச்சுக்கும் திருமாவளவன் செல்ல வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன்" எனச் சவால் விடுத்தார்.
விஜய் மற்றும் சீமானை ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளைகள் எனத் திருமாவளவன் விமர்சித்தது குறித்துப் பேசிய குஷ்பு, "விஜய்யும் சீமானும் பாஜகவின் பிள்ளைகள் என்றால், திருமாவளவன் யாரின் பிள்ளை? திமுக-வின் பிள்ளையா அல்லது காங்கிரஸின் பிள்ளையா?" எனத் திருப்பிக் கேட்டார். அதிமுக கூட்டணி குறித்து எழுந்த வதந்திகளுக்குப் பதிலளித்த அவர், "பாஜக 23 தொகுதிகள் கேட்பதாக வரும் செய்திகள் வதந்திகளே. விரைவில் டெல்லி சென்று பியூஷ் கோயலைச் சந்திக்க உள்ளேன். பாஜக மாநிலத் தலைவரும் எடப்பாடி பழனிசாமியும் விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார்கள்" எனத் தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவது குறித்துக் கட்சித் தலைமை எடுக்கும் முடிவிற்குத் தான் கட்டுப்படுவதாகவும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.
