2026-ல் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் எனத் துணை முதல்வர் உறுதி!
திமுக என்பது மிரட்டல்களுக்குப் பணியும் கட்சியல்ல; அதன் அடிமட்டத் தொண்டன் கூட எதற்கும் பயப்பட மாட்டான் என்று திருவாரூரில் நடைபெற்ற விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாகப் பேசினார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு நலத்திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கலைஞர் கோட்ட வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, மாநில கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவையின் செயலாளராகப் பணியாற்றி மறைந்த ‘இலக்கிய மாமணி’ அர. திருவிடம் அவர்களின் திருவுருவப் படத்தை அவர் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து தொண்டர்களிடையே உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் தேர்தல் மட்டுமல்ல; அது தமிழ்நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் முக்கியமான போர்க்களம். வரும் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற வேண்டும். அந்த இமாலய வெற்றிக்குத் தொடக்கப்புள்ளியாகத் தலைவர் கலைஞர் பிறந்த இந்தத் திருவாரூர் மண் இருக்கும்" என்று ‘பஞ்ச்’ வைத்தார். மேலும், திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக, காட்டூர் பகுதிக்கு வருகை தந்த துணை முதலமைச்சருக்குச் சிறுவர், சிறுமியர்கள் பூக்கள் மற்றும் சாக்லேட்டுகளை வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். மறைந்த திராவிட இயக்க எழுத்தாளர் அர. திருவிடம் அவர்களின் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் தனது ஆழ்ந்த ஆறுதலையும் இத்தருணத்தில் பகிர்ந்துகொண்டார்.
