இரண்டாவது கணவராக வாழ்ந்தவரின் வெறிச்செயல்; திருமண பந்தத்தை மீறிய உறவால் நேர்ந்த விபரீதம்!
சென்னை திருவெற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே, தன்னுடன் வாழ மறுத்த பெண்ணைத் தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்ய முயன்ற வாலிபரை ரயில்வே போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட அந்தப் பெண் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை திருவெற்றியூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த லட்சுமி (39), தனது முதல் கணவர் சேகரைப் பிரிந்து, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் விஜயகுமார் என்பவருடன் திருமணம் செய்துகொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளார். சுமார் எட்டு ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விஜயகுமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து, தனது பிள்ளைகளுடன் லட்சுமி தனியாக வசித்து வந்தார். ஆனால், விஜயகுமார் லட்சுமியைத் தொடர்ந்து பின்தொடர்ந்து தன்னுடன் மீண்டும் வந்து வாழுமாறு மிரட்டி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் லட்சுமியின் முகத்தில் பிளேடால் கீறி தாக்குதல் நடத்திய வழக்கில், விஜயகுமார் கைதாகி ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.
நேற்று இரவு, சென்னை சென்ட்ரல் மூர் மார்க்கெட்டில் தனது வேலையை முடித்துவிட்டுப் புறநகர் ரயிலில் விம்கோ நகர் வந்த லட்சுமியை, விஜயகுமார் வழிமறித்துத் தகராறு செய்துள்ளார். இதனால் அச்சமடைந்த லட்சுமி, எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தண்டவாளம் அருகே நடந்து சென்றபோது, மறைத்து வைத்திருந்த இரும்புச் சுத்தியலால் விஜயகுமார் லட்சுமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த லட்சுமியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர். தப்பியோடிய விஜயகுமாரைக் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விரட்டிப் பிடித்துக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
