செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக! கிளாம்பாக்கத்தில் நள்ளிரவில் செவிலியர்கள் கைது: வாக்குறுதி எண் 356-ஐ அமல்படுத்த இ.பி.எஸ். வலியுறுத்தல்!
செவிலியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்த தி.மு.க. அரசின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய 'ஃபெயிலியர் மாடல்' (Failure Model) ஸ்டாலின் அரசை அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கத்தின் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் நேற்று (18.12.2025) ஆயிரக்கணக்கான செவிலியர்கள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
நேற்று இரவு 7.30 மணியளவில், போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்களைக் காவல்துறை கைது செய்து, பேருந்துகள் மூலம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குக் கொண்டு சென்றது.
கிளாம்பாக்கத்தில் இறக்கிவிடப்பட்ட செவிலியர்கள், அங்கேயே தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலையமாட்டோம் எனக்கூறி தி.மு.க. அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை மீண்டும் கைது செய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
வாக்குறுதி எண் 356:
2021 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க. அளித்த வாக்குறுதி எண் 356-ஐ (செவிலியர்களுக்கான உரிமைகள் தொடர்பான வாக்குறுதி) உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கொரோனா காலக்கட்டத்தில் அ.தி.மு.க. அரசால் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய தி.மு.க. அரசால் பணிநீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்.
கடந்த நான்கரை ஆண்டுகளாகப் போராடி வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என ஸ்டாலின் அரசை இ.பி.எஸ். வலியுறுத்தியுள்ளார்.
