11 தேர்தலில் தோற்றவர் கட்சிக்குத் தலைமையா? – எடப்பாடியை ஏற்க இனி வாய்ப்பே இல்லை எனப் பன்னீர்செல்வம் அதிரடி முழக்கம்!
அதிமுக-வின் ‘தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ சார்பில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி மீதும், அவரது தலைமை மீதும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதிமுக என்ற மாபெரும் இயக்கம் இப்போது ஒரு "குரங்கு கையில் சிக்கிய பூமாலை" போலச் சீரழிந்து கொண்டிருப்பதாக அவர்கள் சாடியுள்ளனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய வைத்திலிங்கம், "புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்தக் கட்சியை இரத்தமும் சதையுமாக வளர்த்தார். ஜெயலலிதா அவர்கள் தன் வாழ்நாளை அர்ப்பணித்து இயக்கத்தைக் கட்டி காத்தார். ஆனால், இன்று அதிமுக என்ற பூமாலை ஒரு குரங்கு கையில் மாட்டிக்கொண்டுள்ளது. ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரைத் திட்டமிட்டுப் பிரித்துப்போட்டு, எடப்பாடி பழனிசாமி கட்சியைப் படுபாதாளத்திற்குத் தள்ளியுள்ளார். எடப்பாடி இருக்கும் அதிமுக-வை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. இன்று காலை வரை இணைப்புக்குக் கால அவகாசம் கொடுத்தோம், இனி அவரை ஏற்பதற்குப் பேச்சே இல்லை. ஓபிஎஸ் எடுக்கும் எந்த முடிவுக்கும் நாங்கள் கட்டுப்படுவோம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், "பழனிசாமி என்கிற பெயரைச் சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. அதிமுக-வின் கோட்பாடு தெரியாத தற்குறி அவர். நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏழு இடங்களில் டெபாசிட் இழந்ததோடு, 11 தேர்தல்களில் தொடர் தோல்விகளைக் கண்டவர் எடப்பாடி. ஒரு மாயையை உருவாக்கி, தான் ஏதோ சிறப்பாக வழிநடத்துவதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். 7 நாடாளுமன்றத் தொகுதிகள் என்பது 42 சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சமம். இவ்வளவு பெரிய வீழ்ச்சியைத் தந்த அவருக்குத் தொண்டர்கள் விரைவில் பாடம் புகட்டுவார்கள்" என ஆவேசமாகப் பேசினார். அதிமுக-வை மீட்காமல் ஓயப்போவதில்லை என அவர்கள் உறுதி பூண்டுள்ளதால், தேர்தல் களம் இப்போது பல்வேறு திருப்பங்களை நோக்கி நகர்ந்துள்ளது.
