அதிமுக தேர்தல் 'விருப்பமனு' இன்றுடன் நிறைவு: 'சீட்' கேட்டு வராத நிர்வாகிகள்! கலக்கத்தில் இபிஎஸ்? ADMK Candidate Application Deadline Ends

கூட்டணி குறித்த குழப்பத்தால் முடங்கிய முக்கிய புள்ளிகள்: கால நீட்டிப்புக்கு 'நோ' சொன்ன தலைமை! ராயப்பேட்டையில் நிலவும் நிசப்தம்!


தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் விருப்பமனு தாக்கல் செய்யும் படலம் இன்று மாலை 6 மணியுடன் ஒரு வழியாக நிறைவு பெற்றது. கடந்த 15-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த நிகழ்வின் முதல் நாளில் சுமார் 1300 மனுக்கள் குவிந்தன. ஆனால், ‘ஆரம்பம் அமர்க்களம், அடுத்ததெல்லாம் மந்தம்’ என்கிற ரீதியில், அடுத்தடுத்த நாட்களில் மனுத் தாக்கல் செய்ய வருவோரின் எண்ணிக்கை ‘சொற்பமாக’ சரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு சிறிய ‘பூஸ்ட்’ கிடைத்ததைப் போல மனுக்கள் வந்தாலும், கடைசி வரை ஒரு வேட்பாளர் திருவிழாவிற்கான ‘கெத்து’ தலைமை அலுவலகத்தில் மிஸ்ஸிங் என்பதுதான் தற்போதைய கள நிலவரம்.

இந்த மந்த நிலைக்குப் பின்னால் இருக்கும் அரசியல் நிலவரம் குறித்து விசாரித்தபோது, பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கசிகின்றன. குறிப்பாக, அதிமுக கூட்டணியில் பாஜக 60 முதல் 70 தொகுதிகள் வரை அடம் பிடிப்பதாக வெளியாகும் தகவல்களும், வேறு எந்தெந்த கட்சிகள் ‘வெற்றி கூட்டணியில்’ இணையும் என்பதில் நிலவும் தெளிவற்ற சூழலுமே நிர்வாகிகளைத் தயங்க வைத்துள்ளது. “கைக்காசைப் போட்டு மனு வாங்கிவிட்டு, கடைசியில் அந்தத் தொகுதி கூட்டணிக்குச் சென்றால் என்ன செய்வது?” என்கிற ‘அப்செட்டில்’ பல சீனியர் நிர்வாகிகள் அமைதி காத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக, பல முக்கிய புள்ளிகள் நேரடியாக வராமல், தங்களது பினாமிகள் அல்லது உதவியாளர்கள் மூலம் மனுக்களைக் கொடுத்துவிட்டு ‘சைலண்ட்’ மோடுக்குச் சென்றுவிட்டனர்.

விருப்பமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால், கால நீட்டிப்பு இருக்கும் என்று பலரும் ‘வெயிட்டிங்’கில் இருந்தனர். ஆனால், நிர்வாகிகளின் இந்தத் தயக்கத்தைக் கண்டு அதிருப்தியடைந்த கட்சித் தலைமை, எக்காரணத்தைக் கொண்டும் ‘டெத் லைன்’ மாற்றப்படாது என கறாராக அறிவித்துவிட்டது. எதிர்பார்த்த இலக்கை விடக் குறைவான மனுக்களே வந்துள்ளதாகத் தகவல்கள் கசியும் நிலையில், இந்த ‘விருப்பமனு’ விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு ‘அக்னிப் பரீட்சையாக’ மாறியுள்ளது. தொகுதிகளுக்கான போட்டியை விட, கூட்டணியை உறுதி செய்வதில்தான் தொண்டர்களின் கவனம் இப்போது முழுமையாகத் திரும்பியுள்ளது.


Previous Post Next Post

Post Ads 1

Post Ads 2

The Chennai Silks - Let the Celebrations Begin!

Silk Sarees- Buy Pure Silk and Soft Silk Sarees at The SCM Silk