பிரச்சாரப் பயணம் முதல் தேர்தல் அறிக்கை வரை! செங்கோட்டையன் - ஆனந்த் தலைமையில் அதிரடி ஆலோசனைக் கூட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தேர்தல் பணிகளை முடுக்கிவிடவும் நாளை சென்னையில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் முக்கியமான ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளப் போர்க்கால அடிப்படையில் ஆயத்தமாகி வருகிறது. ஏற்கனவே 120 மாவட்டங்களாகக் கழகத்தைப் பிரித்து புதிய நிர்வாகிகளைத் தலைவர் விஜய் நியமித்துள்ள நிலையில், அவர்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க நாளை (டிசம்பர் 24) நண்பகல் 1 மணிக்குப் பிரம்மாண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கழகத்தின் பிரச்சார மற்றும் வார் ரூம் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மற்றும் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஆகியோர் தலைமை தாங்குகின்றனர்.
இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்துத் தலைமை ஒரு ‘பக்கா’ பட்டியலைத் தயாரித்துள்ளது. குறிப்பாக, வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் குறித்த முழுமையான திட்டங்கள் வகுக்கப்படவுள்ளன. மேலும், மாவட்டச் செயலாளர்களின் கடந்த காலச் செயல்பாடுகள் மற்றும் அவர்கள் மீது ‘வார் ரூம்’ சேகரித்து வைத்துள்ள ரகசியப் புகார்கள் குறித்தும் இக்கூட்டத்தில் கேள்வி எழுப்பப்படவுள்ளது. தகுதியற்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான முதற்கட்டப் பணிகளும் இந்தக் கூட்டத்தில் சூடுபிடிக்கவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் நிலவும் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் மக்கள் கோரிக்கைகள் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் விரிவாகக் கேட்டறியப்படவுள்ளது. கழகத் தலைவர் விஜய் இல்லாத சூழலில், செங்கோட்டையன் மற்றும் ஆனந்த் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம், தவெக-வின் தேர்தல் வியூகத்தில் ஒரு முக்கியமான ‘திருப்புமுனையாக’ அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ல் கோட்டையைப் பிடிக்கத் தயாராகும் தவெக-வின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
.jpg)