தேவாரம் பாடல் பெற்றத் தலங்கள் வழியாக 30,000 கி.மீ. பயணம்; பாரம்பரிய ஆதீனங்கள் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட ஆன்மிகப் பேரணி!
கோவை: கோவை ஈஷா யோகா மையத்தில் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெறவுள்ள மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, தென் கைலாய பக்தி பேரவை மற்றும் தமிழகத்தின் தொன்மை வாய்ந்த ஆதீனங்கள் இணைந்து நடத்தும் ஆதியோகி ரத யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆன்மிகப் பெருவிழா குறித்த பிரஸ் மீட் இன்று கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தென் கைலாய பக்தி பேரவை அடியார் வள்ளுவன், இந்த ஆண்டு யாத்திரையின் ஸ்பெஷல் அம்சங்களை விவரித்தார்.
இந்த பிரம்மாண்ட ரத யாத்திரை, தமிழகத்தின் நான்கு முக்கிய மண்டலங்களில் இருந்தும் அந்தந்தப் பகுதி ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்களால் ஃபிளாக்-ஆஃப் செய்து தொடங்கி வைக்கப்பட உள்ளது. குறிப்பாக, மேற்கு மண்டலத்திற்கான யாத்திரை கோவை ஆதியோகி திருவுருவம் முன்பிருந்து இன்று பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலையில் முறைப்படி தொடங்கப்படுகிறது.
சுமார் 7 அடி உயரமுள்ள தத்ரூபமான ஆதியோகி சிலையுடன் வடிவமைக்கப்பட்டுள்ள நான்கு ரதங்கள், அடுத்த இரண்டு மாதங்களில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக 30,000 கிலோமீட்டர் தூரம் பயணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மெகா ஈவென்ட்டின் ஒரு பகுதியாக, சிவ யாத்திரை என்ற பெயரில் பாத யாத்திரையும் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் சிவாங்கா பக்தர்கள் ஆதியோகி தேர்களை இழுத்தபடி கோவை நோக்கி வரவுள்ளனர். மேலும், 63 நாயன்மார்களின் திருவுருவங்கள் தாங்கிய தேரும் இந்த யாத்திரையில் அணிவகுக்க உள்ளது.
ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத பக்தர்கள் தங்கள் இல்லம் தேடி வரும் ரதங்களுக்குத் தீபாராதனை மற்றும் நைவேத்தியங்களைச் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவாரப் பணி, தேவாரம் - திருவாசகம் முற்றோதல் எனப் பல்வேறு ஆன்மிக ஆக்டிவிட்டீஸ்களை முன்னெடுத்து வரும் தென் கைலாய பக்தி பேரவையின் இந்த முயற்சி, தமிழகத்தில் மீண்டும் ஒரு சைவ மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
in
ஆன்மிகம்