கோலாலம்பூரில் 90 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி! சுங்கத்துறை சோதனைகளை முடித்துச் சென்ற தவெக தலைவர்!
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், நடிகருமான விஜய் தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று தனி விமானம் மூலம் மலேசியா புறப்பட்டுச் சென்றார்.
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் மூன்றாவது பாடல் வெளியீடு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் தேசிய மைதானத்தில் நடைபெறவுள்ளது. அரசியல் பிரவேசத்திற்கு முன் விஜய் நடிக்கும் கடைசித் திரைப்படம் இது என்பதால், சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்பதற்காகத் தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து மலேசியா புறப்பட்டார்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தடைந்த விஜய், சுங்கத்துறை சோதனை மற்றும் குடியுரிமைச் சோதனைகள் என அனைத்து முறையான பாதுகாப்பு நடைமுறைகளையும் நிறைவு செய்தார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்குள் நுழையும்போது அங்கிருந்த செய்தியாளர்கள் அவரை அழைத்தனர்; அப்போது சிறிது நேரம் உள்ளே சென்றவர், மீண்டும் வெளியே வந்து செய்தியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் புன்னகையுடன் கையசைத்து வழியனுப்பு பெற்றுக்கொண்டு விமானத்திற்குள் சென்றார். அவருடன் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் படக்குழுவினரும் பயணித்தனர்.
மலேசியாவில் சுமார் 10 மணி நேரம் நடைபெறவுள்ள இந்த 'தளபதி திருவிழா' கலைநிகழ்ச்சியில் ஏறத்தாழ 90 ஆயிரம் ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் மூன்றாவது பாடலான 'செல்ல மகளே' இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தின் மீதமுள்ள பாடல்கள் அனைத்தும் மலேசிய மேடையில் அரங்கேறவுள்ளன. மலேசியக் காவல்துறையின் சில கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ள இந்த இசை விழா, விஜய்யின் திரைப்பயணத்தில் ஒரு மறக்க முடியாத மைல்கல்லாக அமையும் எனத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
.jpg)