நாமக்கல் கோழிப் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி; குளிர் காலத் தேவையால் விலை கிடுகிடு உயர்வு - நுகர்வோர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமான நாமக்கல்லில், முட்டை விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. 55 ஆண்டுகாலத் தமிழ்நாடு கோழிப் பண்ணை வரலாற்றில் முதல் முறையாக, முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 6 ரூபாய் 30 காசுகள் என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சுமார் 25 நாட்களுக்குப் பிறகு முட்டை விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம், பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும், முட்டை பிரியர்களுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) இன்று மாலை நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலையை 6.25 ரூபாயிலிருந்து 5 காசுகள் உயர்த்தி, ரூ. 6.30 ஆக நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. இந்த புதிய விலை நாளை (21-12-2025) காலை முதல் அமலுக்கு வருகிறது. தற்போது நிலவி வரும் கடும் குளிர் காரணமாக முட்டையின் நுகர்வும், விற்பனையும் பலமடங்கு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், மற்ற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருவதும், கோழித் தீவன மூலப்பொருட்களின் விலை ஏற்றமும் இந்தப் புதிய உச்சத்திற்கு வழிவகுத்துள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 1,100-க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் மூலம் நாள்தோறும் சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் 40 சதவீத முட்டைகள் அண்டை மாநிலமான கேரளாவிற்கும், தினசரி 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு வழங்கப்பட்டது போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. வழக்கமாகப் பனிக்காலம் தொடங்கியவுடன் முட்டை விலை உயர்வது வாடிக்கை என்றாலும், வரும் நாட்களில் தேவை இன்னும் அதிகரிக்கும் என்பதால் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகப் பண்ணையாளர்கள் கணித்துள்ளனர்.
