3000 ஆண்டுகாலப் பெருமை; ஆதிச்சநல்லூர், சிவகளைத் தடயங்களுடன் ரூ.56.36 கோடியில் பிரம்மாண்டமாக ஜொலிக்கும் கலைக்கூடம்!
உலக நாகரிகத்தின் தொட்டில் எனப் போற்றப்படும் பொருநை ஆற்றங்கரை நாகரிகத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ‘பொருநை அருங்காட்சியகத்தை’ தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார். தமிழர்களின் தொன்மையை அறிவியல்பூர்வமாக மெய்ப்பிக்கும் இந்த அருங்காட்சியகம், தென்தமிழகத்தின் புதிய வரலாற்றுச் சின்னமாக உருவெடுத்துள்ளது.
தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகத்தின் சான்றுகளை மீட்டெடுக்கும் நோக்கில், கடந்த 2023-ஆம் ஆண்டு இந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 56.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இரும்புக்காலத் தமிழர்களின் வாழ்வியலை விளக்கும் வகையில் இந்தப் பிரம்மாண்டக் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டறியப்பட்ட அரிய தொல்பொருட்களைக் காட்சிப்படுத்துவதே இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாகும். இங்குச் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் பயன்படுத்திய இரும்புப் பொருட்கள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், ஏடுகள் மற்றும் ஆபரணங்கள் என ஆயிரக்கணக்கான தடயங்கள் வியக்கத் தக்க வகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
வெறும் காட்சிப் பொருளாக மட்டுமல்லாமல், நவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி முன்னோர்களின் வாழ்வியல் முறையை விளக்கும் வகையில் 3D மற்றும் 5D திரையரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சங்ககாலத் தமிழர்களின் வணிகம், விவசாயம் மற்றும் கடல் கடந்த பயணங்களைச் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தத்ரூபமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். திறப்பு விழாவையொட்டி வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், இரவு நேரத்தில் ஒரு பேரரசனின் கோட்டையைப் போலக் காட்சியளிக்கிறது. தமிழர்களின் வேர்களைத் தேடி வரும் உலகப் பயணிகளுக்குப் பொருநை அருங்காட்சியகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
.jpg)

