பெரியாரை இடிப்போம் என்பது சனாதனச் சதி: மதுரையில் திருமாவளவன் அதிரடிப் பேச்சு!
மதுரையில் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் எழுதிய "கருப்பு ரட்சகன்" நாவல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சனாதன ஊடுருவல் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் சண்முகம், இயக்குநர்கள் வெற்றிமாறன், சரவணன் மற்றும் நடிகர் சசிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த மேடையில், திருமாவளவன் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
நிகழ்வில் உரையாற்றிய திருமாவளவன், "மதுரையைத் திட்டமிட்டுச் சனாதன மையமாக மாற்றப் பார்க்கிறார்கள். சாதிச் சங்கங்களை அணுகி, சாதி உணர்வுகளைத் தூண்டிவிட்டுச் சகோதரத்துவத்தைச் சிதைக்கிறார்கள். ஜனநாயக உணர்வை வளர்ப்பதற்குப் பதிலாகச் சாதி, மத உணர்வுகளைத் தூண்டுவது மிகவும் ஆபத்தானது. உண்மையான தமிழ்த்தேசியம் என்பது சனாதன எதிர்ப்பில் தான் அடங்கியிருக்கிறது. மதவழி தேசியத்தை எதிர்ப்பதுதான் மெய்யான தமிழ்த்தேசியம். இன்று வலது சாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால், பெரியாரையே 'கடப்பாறையை வைத்து இடிப்போம்' என்று பகிரங்கமாகச் சொல்லும் நிலை உருவாகியுள்ளது. பெரியாரை ஒழிப்போம் என்று சொல்வது சனாதன சக்திகளின் ஆபத்தான நகர்வு" என்று எச்சரித்தார்.
கூட்டணி குறித்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், "நான் தேர்தல் நேரத்தில் மட்டுமே தேர்தலைப் பற்றிப் பேசுவேன். 10 சீட் கூடுதலாக வாங்குவதால் நான் முதலமைச்சர் நாற்காலியில் அமரப் போவதில்லை. பதவி ஆசை இருந்தால் அதிக சீட் கொடுக்கும் கட்சியோடு சென்றிருக்கலாம். இவ்வளவு விமர்சனங்களுக்குப் பின்னரும் திமுக கூட்டணியில் தொடர்வதற்குக் காரணம் கொள்கையே தவிரப் பதவி அல்ல. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது நான் எடுத்த முடிவுகளாகட்டும், வேங்கைவயல் விவகாரமாகட்டும், எதிலும் நான் என் தனிப்பட்ட நலனைச் சிந்தித்தது இல்லை. இந்த ஆட்சியில் அரசுக்கும், காவல்துறைக்கும் எதிராக எங்களைப் போலப் போராடியவர்கள் யாருமில்லை. கலைஞர் காலத்திலேயே கூட்டணிக் கட்டுப்பாடின்றி உரிமைக்காகக் குரல் கொடுத்தவன் நான்" என்று தனது அரசியல் பயணத்தின் நேர்மையை உரக்கச் சொன்னார்.
