இஸ்ரோவின் மெகா வெற்றி: 5,908 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை ஏவி எல்விஎம்3 ராக்கெட் சாதனை!
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) இன்று தனது 9-வது LVM3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவி, 100 சதவீத வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து தக்கவைத்துள்ளது. இந்த ஏவுதலின் மூலம், இந்திய மண்ணிலிருந்து இதுவரை ஏவப்பட்டதிலேயே அதிகபட்ச எடையான 5,908 கிலோ கொண்ட 'புளூ பேர்ட்' செயற்கைக்கோளைப் புவி தாழ்வட்டப் பாதையில் நிலைநிறுத்தி இஸ்ரோ தலைவர் நாராயணன் புதிய வரலாறு படைத்துள்ளார்.
இன்று காலை நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏவுதலுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், "இன்று நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள் 520 கி.மீ தாழ்வட்டப் பாதையை இலக்காகக் கொண்ட நிலையில், 518.4 கி.மீ உயரத்தில் மிகத் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 45 ஆண்டுகளில் 34 நாடுகளுக்காக மொத்தம் 434 செயற்கைக்கோள்களை அனுப்பி இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட அடுத்த 52 நாட்களிலேயே மீண்டும் ஒரு மாக்-3 ராக்கெட்டை ஏவியுள்ளோம். குறிப்பாக, ககன்யான் மனித விண்வெளிப் பயணத் திட்டத்திற்காக வடிவமைக்கப்பட்ட 'எலக்ட்ரோ மெக்கானிக்கல் S200 பூஸ்டர்' முதல் முறையாக இந்த ராக்கெட்டில் பயன்படுத்தப்பட்டு வெற்றி கண்டுள்ளது. இது ககன்யான் திட்டத்தின் நம்பகத்தன்மையை பல மடங்கு அதிகரித்துள்ளது" எனத் தெரிவித்தார்.
ஏவுதலின் போது ஏற்பட்ட ஒன்றரை நிமிடத் தாமதம் குறித்து விளக்கிய அவர், ராக்கெட் செல்லும் பாதையில் விண்வெளி கழிவுகள் (Space Debris) மற்றும் பிற செயற்கைக்கோள்களின் நடமாட்டத்தை ஆய்வு செய்து, எந்த சேதமும் ஏற்படக் கூடாது என்பதற்காகவே அந்தத் தாமதம் செய்யப்பட்டதாகக் கூறினார். மேலும், ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்கான வடிவமைப்புப் பணிகள் முடிந்துவிட்டதாகவும், அடுத்த நான்கு ஆண்டுகளில் அது செயல்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவித்தார். நிலவின் தென்துருவத்திலிருந்து மண் மற்றும் கல் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வரும் ‘சந்திரயான் 4’ திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், அந்தத் திட்டத்தில் இரண்டு ஏவுவாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.
