ஓபிஎஸ், டிடிவி விவகாரத்தில் மென்மையான போக்கா? "வேலியில் போகும் ஓணானை வேட்டியில் விடமாட்டேன்" எனப் புது விளக்கம்!
அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மற்றும் கூட்டணிக் குழப்பங்கள் குறித்து நிலவி வரும் பல்வேறு கேள்விகளுக்கு, அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் இன்று தனது பாணியில் சுவாரசியமான பதில்களை அளித்துள்ளார். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வை 'கட்டி முடிக்கப்பட்ட கோபுரம்' எனக் குறிப்பிட்ட அவர், விமர்சிப்பவர்களை 'உதிர்ந்த செங்கற்கள்' என்று வர்ணித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துவிட்டாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "இது மிகவும் உயர்மட்டத்திலான விஷயம். அவர்களின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பதைப் பொதுச்செயலாளர் தான் முடிவு செய்ய முடியும். இப்போதைக்கு 'காத்திருந்து பார்ப்போம்' (Let's wait and see) என்றுதான் என்னால் சொல்ல முடியும்" எனச் சற்று நிதானமாகப் பதிலளித்தார். முன்னதாக இவர்களைக் கடுமையாக விமர்சித்து வந்த ஜெயக்குமார், இப்போது ஏன் மென்மையாகப் பேசுகிறார் என்ற கேள்விக்கு, "எங்கள் கட்சியை விமர்சிப்பவர்களை நான் சும்மா விடமாட்டேன். ஆனால், விமர்சனங்கள் கடுமையாக இல்லாதபோது, நான் ஏன் வேலியில் செல்லும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்டுக்கொள்ள வேண்டும்?" எனத் தனது டிரேட்மார்க் நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்தார்.
வைத்திலிங்கத்தின் 'குரங்கு கையில் பூமாலை' என்ற விமர்சனத்திற்குப் பதில் தந்த ஜெயக்குமார், "அதிமுக என்பது பூமாலை அல்ல, அது கட்டி முடிக்கப்பட்ட ஒரு பிரம்மாண்டமான கோபுரம். அந்தக் கோபுரத்தில் இருந்து உதிர்ந்த செங்கற்கள்தான் அவர்கள். கோபுரம் வேறு, செங்கற்கள் வேறு. இந்தக் கோபுரத்தில் இருந்து ஒரு சிறு துரும்பைக் கூட யாராலும் அசைக்க முடியாது" எனத் தெரிவித்தார். மேலும், 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றக் கூடாது என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாகவும், ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் புதிய கெடுபிடிகளைக் களைந்து பழைய முறைப்படியே திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
.jpg)