கூட்டணி குறித்து விஜய் தான் முடிவெடுப்பார்; ஈரோடு மாநாடு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது எனப் பெருமிதம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகத் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தமிழக அரசியலில் அடுத்தகட்டமாக நிகழப்போகும் அதிரடி மாற்றங்கள் குறித்து மிக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ‘மாஸ்டர் பிளான்’ குறித்து அவர் வெளியிட்ட தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் அனலைக் கிளப்பியுள்ளன.
செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், "ஈரோட்டில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற தவெக-வின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம், தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. தலைவர் விஜய்யைப் பார்ப்பதற்குத் தன்னிச்சையாக சுமார் 3 லட்சம் பேர் திரண்டது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். இன்று மாலை விஜய்யுடன் கலந்தாலோசனை நடத்த உள்ளோம். அதன்பிறகு எந்தெந்த மாவட்டங்களில் அடுத்தகட்ட கூட்டங்களை நடத்துவது என்பது குறித்து அவரது அறிவுறுத்தலின்படி முடிவெடுக்கப்படும்" என்று உற்சாகமாகத் தெரிவித்தார்.
கூட்டணி குறித்து எழுந்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "கூட்டணி தொடர்பான அனைத்து இறுதி முடிவுகளையும் தலைவர் விஜய் மட்டுமே எடுப்பார். தேர்தலில் இமாலய வெற்றி பெறுவதற்கான ஆயத்தப் பணிகள் மிகச் சிறப்பாகவும், கவனமாகவும் நடந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் பிற கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைய உள்ளனர். குறிப்பாக, பொங்கலுக்குப் பிறகு தமிழக அரசியலில் என்னென்ன மாற்றங்கள் நிகழப்போகிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று ஒரு பெரிய ‘சஸ்பென்ஸ்’ வைத்தார். திருப்பரங்குன்றம் விவகாரம் போன்ற கடந்த கால விஷயங்களைப் பேசாமல், எதிர்காலத்தைப் பற்றிப் பேசித் தமிழகத்தை முன்னேற்றுவதே தங்களின் நோக்கம் என்றும் அவர் தனது பேட்டியில் ஆணித்தரமாகக் குறிப்பிட்டார்.
