கொங்கு மண்ணுக்கே உரித்தான வள்ளி கும்மி நடனத்தைப் பார்த்து மகிழ்ச்சி; மாநிலம் முழுவதும் கலைகளைக் கொண்டு சேர்க்க அரசு திட்டம்!
கோவை: கோவை காந்தி பூங்காவில் உள்ள திறந்தவெளி மேடையில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைத் திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அம்மன்றத்தின் தலைவரும், பிரபல நடிகருமான வாகை சந்திரசேகர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்வில் நாதஸ்வரம் இசை நிகழ்ச்சி, கரகாட்டம், தப்பாட்டம், ஜிக்கா ஆட்டம், மற்றும் கொங்கு மண்ணிற்கே உரித்தான வள்ளி கும்மி நடனம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பூங்காவிற்கு வருகை தந்திருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்தக் கலை நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
கலைகளின் சிறப்பும் அரசின் திட்டங்களும் நிகழ்ச்சியில் மேடையில் பேசிய நடிகர் வாகை சந்திரசேகர், தமிழகக் கலைகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அமைப்பைத் தமிழக முதலமைச்சர் உருவாக்கி இருப்பதாகத் தெரிவித்தார்.
பெயர் மாற்றம்: சங்கீத அகாடமி என்று இருந்த அமைப்பைக் கலைஞர் கருணாநிதிதான் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் என்று பெயர் மாற்றியதை அவர் நினைவு கூர்ந்தார்.
ஓய்வூதியம் உயர்வு: தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 7 லட்சம் கலைஞர்கள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவர்களுக்காக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. கலைஞர்களுக்கு முன்னர் ரூ. 1,000 வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியத்தை, தமிழக முதலமைச்சர் தற்போது ரூ. 3,000 ஆக உயர்த்தி வழங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் செழிப்பு: ஒரு நாடு வளமாகவும் செழிப்பாகவும் இருக்கிறது என்பதை அதன் பொருளாதாரம் மற்றும் கல்வியை வைத்து மட்டும் எடை போடுவதில்லை என்று கூறிய அவர், அந்த நாட்டின் கலையும், மொழியும் சிறப்பாக இருந்தால்தான் அந்த நாடு சிறப்பாக இருக்கும் என்று பெருமிதம் தெரிவித்தார்.
கொங்கு மண்ணிற்கே உரித்தான வள்ளி கும்மி நடனத்தை நேரில் பார்த்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாகக் கூறிய வாகை சந்திரசேகர், வள்ளி கும்மி நடனக் கலைஞர்களுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
in
தமிழகம்