மடிக்கணினி முதல் கல்வி உதவித்தொகை வரை; பொங்கலுக்குள் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற அரசு தீவிரம்!
புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களுக்காகப் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் புதுவைக்கு வருகை தரும்போது, கூடுதல் நிதியை அறிவிப்பார் என முதலமைச்சர் ரங்கசாமி உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மின் துறையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுமான உதவியாளர்களுக்குப் பணி நியமன ஆணை வழங்கும் விழா இன்று காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் மற்றும் மின் துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினர். விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ரங்கசாமி, "புதுச்சேரி அரசு வேலைவாய்ப்புகளை வழங்குவதில் மிகுந்த அக்கறை காட்டி வருகிறது. அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 256 செவிலியர் பணியிடங்களுக்கான ஆணைகள் பொங்கல் பண்டிகைக்குள் வழங்கப்படும். அதேபோல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் மற்றும் காமராஜர் கல்வி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 1,700 பயனாளிகளுக்கு முதல் தவணை நிதியுதவியும் பொங்கலுக்குள் சென்றடையும்" என உறுதி அளித்தார்.
மேலும் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்துப் பேசிய அவர், "விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக சுமார் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. மத்திய அரசு புதுச்சேரிக்குத் தேவையான கூடுதல் நிதியை வழங்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. குறிப்பாக, விரைவில் புதுச்சேரிக்கு வருகை தர உள்ள பாரதப் பிரதமர், மாநில வளர்ச்சிக்கான கூடுதல் நிதித் தொகுப்பை அறிவிப்பார். அரசுத் துறைகளில் உள்ள மீதமுள்ள காலிப் பணியிடங்களும் தேர்தல் ஆணையம் மூலம் வெளிப்படையாக நிரப்பப்படும்" என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
