கனிமொழி, பிடிஆர், டிஆர்பி ராஜா: 2026-க்காக களமிறங்கிய திமுக-வின் மாஸ்டர் டீம்!
தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் இந்தக் குழுவில் அமைச்சர்கள், அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர்:
தலைவர்: கனிமொழி கருணாநிதி (எம்.பி.)
அமைச்சர்கள்:
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி. ராஜா, கோவி செழியன்.
நிர்வாகிகள்:
டி.கே.எஸ். இளங்கோவன், எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், டாக்டர் எழிலன் நாகநாதன்.
இதர உறுப்பினர்கள்:
கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார்.
நிபுணர்கள்:
ஜி.சந்தானம் (ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி), சுரேஷ் சம்பந்தம் (கனவு தமிழ்நாடு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்).
திமுகவின் தேர்தல் அறிக்கை எப்போதும் 'தேர்தலின் கதாநாயகன்' என்று அழைக்கப்படுவது வழக்கம். இந்த முறையும் அதே எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய, இந்தக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
யார் யாரிடம் கருத்து கேட்கப்படும்? விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சிறு-குறு நிறுவன உரிமையாளர்கள், மாற்றுத்திறனாளிகள் அமைப்புகள், வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் இந்தக் குழுவினர் நேரில் சந்தித்துக் கருத்துகளைக் கேட்க உள்ளனர்.
தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தனது தேர்தல் பணிகளை முன்கூட்டியே வேகப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத் தொகை போன்ற முக்கிய வாக்குறுதிகள் மக்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றன. அதேபோல், 2026 தேர்தலிலும் மக்களால் பேசப்படும் வகையிலான புதிய திட்டங்களை உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையைத் தயாரிப்பதே இந்தக் குழுவின் பிரதான இலக்காகும்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வழியாகவும் மக்களின் கருத்துகளைப் பெற இந்தக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026 தேர்தலுக்கான திமுகவின் இந்த 'ஹீரோ' அறிக்கை எத்தகைய விவாதங்களை உருவாக்கும் என்பதை அரசியல் களம் உற்றுநோக்கி வருகிறது.
