பிப்ரவரி 7-ல் தொடங்கும் கிரிக்கெட் திருவிழா; சுப்மன் கில் அதிரடி நீக்கம் - இஷான் கிஷன் மீண்டும் சேர்ப்பு!
அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட பலம் வாய்ந்த இந்திய அணியைப் பிசிசிஐ (BCCI) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மும்பையில் நடைபெற்ற தேர்வுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகு, கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்த அணிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழக கிரிக்கெட் ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் ஆகிய இரு தமிழக வீரர்களுக்கும் உலகக் கோப்பை அணியில் இடம் கிடைத்துள்ளது. சமீபத்திய தொடர்களில் வருண் சக்கரவர்த்தியின் அசத்தலான பந்துவீச்சும், வாஷிங்டன் சுந்தரின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறனும் அவர்களுக்கு இந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்துள்ளன. அதேநேரம், அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் அதிரடியாக நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 உலகக் கோப்பை திருவிழா மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் டூபே மற்றும் ‘பினிஷர்’ ரிங்கு சிங் ஆகியோர் பேட்டிங் வரிசையை வலுப்படுத்துகின்றனர். பந்துவீச்சு துறையில் ஜஸ்பிரித் பும்ரா தலைமையில் ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் சுழலில் குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ஆகியோர் எதிரணிகளை மிரட்டத் தயாராக உள்ளனர். நடப்பு சாம்பியனான இந்தியா, தனது பட்டத்தைத் தக்கவைத்துக் கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.


