ஆறு மாதம் நடித்துவிட்டு முதல்வர் ஆக முடியாது; விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட வேண்டாம் எனப் புதுக்கோட்டையில் சாடல்!
புதுக்கோட்டை மாவட்டம் வடவாளம் கிராமத்தில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தைத் தொடங்கி வைத்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள் குறித்து மிகக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார். விஜய்யின் "தீய சக்தி - தூய சக்தி" பேச்சிற்குப் பதிலடி கொடுத்த அவர், திமுக என்பது எதற்கும் கலங்காத 'மக்கள் சக்தி' என்று ‘பஞ்ச்’ வைத்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, "விஜய் சினிமா டயலாக் எழுதி கொடுத்ததைப் படிப்பது போன்று தீய சக்தி, தூய சக்தி என்று பேசுகிறார். மக்கள் சக்தியைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. ஆறு மாதம் சினிமாவில் நடித்துவிட்டு முதலமைச்சர் ஆவது எல்லாம் ரீல் அரசியலில் வேண்டுமானால் நடக்கும், நிஜ அரசியலில் நடக்காது. விஜய்க்குச் சிலப்பதிகாரமும் தெரியாது, ஒன்றும் தெரியாது; அவருக்குப் பின்னணியில் இருந்து எழுதிக் கொடுப்பவர்களிடம் தான் நாம் இதைக் கேட்க வேண்டும். பெரியாரைக் கொள்கைத் தலைவராக ஏற்றாலே திராவிடத்தை ஏற்றுக் கொண்டதாகத் தான் அர்த்தம். ஆனால், பாஜகவின் 'சி-டீம்' ஆக இருக்கும் விஜய் அதை மறைக்கப் பார்க்கிறார்" என்று வறுத்தெடுத்தார்.
எம்.ஜி.ஆர் உடன் விஜய்யை ஒப்பிடுபவர்களுக்குப் பதிலளித்த அமைச்சர், "எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சி தொடங்கி திண்டுக்கல் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்புதான் அவரது அரசியல் பலம் உறுதியானது. அதேபோல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் விஜய் நின்று வெற்றி பெற்றுத் தன் பலத்தை நிரூபித்திருந்தால் இன்று பேசுவதற்கு அவருக்குத் தகுதி (யோகிதை) இருந்திருக்கும். ஆனால் தேர்தலைக் கண்டு புறமுதுகிட்டு ஓடிவிட்ட விஜய்யால் எந்தக் காலத்திலும் எம்.ஜி.ஆர் ஆக முடியாது. சினிமாவில் 100 பேரை அடிப்பது போலத் தரம் தாழ்ந்து அவர் பேசுகிறார்" என்றார். மேலும், அதிமுகவின் இரட்டை நிலைப்பாட்டையும், நயினார் நாகேந்திரனின் மிரட்டல்களையும் விமர்சித்த அவர், 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் குறித்து திமுகவினர் சரிபார்த்த பின்னரே முறையான கருத்து தெரிவிக்கப்படும் என்றும் ‘அப்டேட்’ செய்தார்.
