51 கோடியில் பிரம்மாண்டப் பாலம்; மழையால் சேதமடைந்த சாலைகள் ஜனவரியில் சீரமைக்கப்படும் என உறுதி!
திருநெல்வேலி மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வடக்கு புறவழிச்சாலையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய உயர்மட்டப் பாலப் பணிகளைத் தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதிநவீன உபகரணங்களைக் கொண்டு பாலத்தின் கட்டுமானத் தரத்தை அமைச்சரே நேரடியாகச் சோதித்து, பணிகளைத் துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, "நெல்லை வடக்கு புறவழிச்சாலையில் ஏற்கெனவே ஒரு பாலம் பயன்பாட்டில் உள்ளது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, கூடுதலாக ஒரு பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. கடந்த ஆண்டு தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, பழைய பாலத்தை விடப் புதிய பாலத்தை உயரமாகக் கட்ட மாவட்ட ஆட்சியர் பரிந்துரைத்தார். அதன்படி மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 210 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 95 சதவீதப் பணிகள் முடிவடைந்துவிட்டன. வரும் ஜனவரி மாதத்திற்குள் அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டுப் பாலம் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்" என்று மகிழ்ச்சியான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

.jpg)