பிளாக்ராக் கூட்டணியை ஏமாற்றிய இந்திய CEO பங்கிம் பிரம்மபட்.. பொய்யான வருவாய் ஆவணங்களைக் காட்டி மெகா கடன்!
அமெரிக்காவின் நிதி உலகை உலுக்கிய தகவல் தொழில்நுட்பத் துறையின் (Tech Sector) மகா மோசடி விவகாரத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பங்கிம் பிரம்மபட் மீது சுமார் ₹4,100 கோடி (500 மில்லியன் டாலர்) மதிப்புள்ள கடன் மோசடியில் ஈடுபட்டதாகப் பகிரங்கக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிளாக்ராக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் தனியார் கடன் வழங்கும் பிரிவுகள் இந்த அதிரடிப் புகாரைக் கிளப்பியுள்ளன.
தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டுள்ள உளவுத் தகவல் அறிக்கையின்படி, பிரம்மபட் தனது பிராட்பேண்ட் டெலிகாம் (Broadband Telecom) மற்றும் பிரிட்ஜ்வாய்ஸ் (Bridgevoice) ஆகிய நிறுவனங்கள் மூலம், போலியான வாடிக்கையாளர் நிலுவைத் தொகைகள் மற்றும் வருவாய் தகவல்களைக் கள்ளத்தனமாக உருவாக்கி, ஆவணக் கையாடல் செய்துள்ளார். இதன் மூலம் 4,100 கோடிக்கும் அதிகமான கடன்களைப் பெற்றுள்ளார். பிளாக்ராக்-ன் தனியார் கடன் முதலீட்டு பிரிவான HPS Investment Partners, 2020ஆம் ஆண்டு முதல் அவருக்கு இந்தக் கடன்களை வழங்கியுள்ளன.
கடந்த ஜூலை 2025-ல், இந்தக் கடன் விவகாரங்களில் மின்னஞ்சல் முகவரிகளில் கள்ளத்தனமான தகவல்கள் (fraudulent email addresses) கண்டுபிடிக்கப்பட்டதால், இந்தச் சங்கிலித் தொடர் மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. இதுகுறித்து விளக்கம் கேட்டு HPS நிர்வாகம் பிரம்மபட்டைத் தொடர்பு கொண்டபோது, அவர் திடீரெனத் தனது அனைத்துத் தொடர்புகளையும் துண்டித்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து HPS வழக்குத் தொடர்ந்த அதே நாளிலேயே, பிரம்மபட் தனது நிறுவனங்களுக்கு அமெரிக்கச் சட்டத்தின் கீழ் Chapter 11 திவால் பாதுகாப்பு மனுவைச் சுயலாப நோக்கத்துடன் தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், பிணையாக வைக்க வேண்டிய சொத்துக்கள் அனைத்தும் முக்கிய ஆவணங்கள் மறைக்கப்பட்டதன் மூலம், இந்தியா மற்றும் மொரீஷியஸில் உள்ள வெளிநாட்டுக் கணக்குகளுக்கு (Offshore Accounts) முறையற்ற வகையில் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரம்மபட் தற்போது அமெரிக்காவை விட்டுத் தப்பித்து இந்தியாவுக்கு வந்திருக்கலாம் என்றும் விசாரணை வட்டாரங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன. எனினும், பிரம்மபட்டின் சட்ட ஆலோசகர் (Attorney), அவர் மீதான அனைத்து குற்றப்பத்திரிகைகளையும் (charges) உறுதியாக மறுத்துள்ளார்.
