பணிச்சுமையைக் குறைக்க கூடுதல் ஊழியர்கள்: தேர்தல் ஆணையத்திற்குப் பணியாளர்களை நியமிக்க மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்று வரும் நிலையில், அதன் பணிச்சுமையால் பாதிக்கப்படும் பணியாளர்களை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து, அவர்களுக்குப் பதிலாக வேறு நபர்களை நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளது.
SIR பணிகளை நிறுத்தக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பணியாளர்களின் நலன் குறித்து முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியது.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களை SIR உட்படத் தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. ஒவ்வொரு புகாரையும் தனித்தனியாக ஆய்வு செய்த பின்னரே மாற்று நியமனம் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
SIR பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், பணி நேரத்தைக் குறைக்கும் வகையில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும் அறிவுறுத்தியது. தேர்தல் ஆணையத்திற்குத் தேவையான பணியாளர்களை நியமிக்க மாநில அரசுகள் கடமைப்பட்டுள்ளன என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டது.
SIR பணிச்சுமையைக் காரணம் காட்டித் தேர்தல் ஆணையம் பணியாளர்களை விடுவிக்க மறுப்பதாக மனுதாரர் தரப்பில் புகார் முன்வைக்கப்பட்டது. மேலும், இந்தப் பணிச்சுமையால் பலர் உயிரிழந்ததாகவும், உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட 50 தேர்தல் அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியது.
இந்தப் பின்னணியில்தான், பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யக் கோரி உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
.jpg)