வயது மூப்பு காரணமாகச் சென்னையில் உயிரிழப்பு: 'சிவாஜி', 'சம்சாரம் அது மின்சாரம்' உட்பட 300 படங்களைத் தயாரித்தவர் - திரையுலகினர் சோகம்!
பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய சினிமாவின் ஜாம்பவான் நிறுவனமான ஏ.வி.எம். நிறுவனத்தின் இயக்குநருமான ஏ.வி.எம். சரவணன் (86), இன்று காலை வயது மூப்பு காரணமாகச் சென்னையில் காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் மூன்றாவது மகனான ஏ.வி.எம். சரவணன், 1958 ஆம் ஆண்டில் இருந்து ஏ.வி.எம். நிறுவனத்தின் சினிமா தயாரிப்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார்.
ஏ.வி.எம். மெய்யப்ப செட்டியாருக்குப் பின்னர், அந்த நிறுவனத்தை திறம்பட நிர்வகித்ததில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களை ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்துள்ளது.
இவரது தயாரிப்பில் 'சம்சாரம் அது மின்சாரம்', 'சகலகலா வல்லவன்', 'மனிதன்', 'எஜமான்', 'சிவாஜி', 'வேட்டைக்காரன்', 'மின்சார கனவு' உள்ளிட்ட பல வெற்றிப் படங்கள் வெளியாகி, பல ஸ்டார் நடிகர்களை உருவாக்கியுள்ளன.
எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட பல தலைமுறை நடிகர்களின் படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை இவர் பெற்றவர்.
வயது மூப்பினால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாகச் சில மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த ஏ.வி.எம். சரவணன், வடபழனியில் உள்ள ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை 5.30 மணியளவில் அவர் காலமானார்.
அவரது உடல் ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள 3வது தளத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏ.வி.எம். மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
ரஜினி, கமல் உள்ளிட்ட பல ஸ்டார்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் சரவணன் என்பதை நினைவுகூர்ந்து, திரைப்பிரபலங்கள் அவரது உடலுக்கு நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தற்போது, அவரைத் தொடர்ந்து அவரது மகன் குகன் ஏ.வி.எம். நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
