பருவமழைக்குப் பிறகும் அணை உறுதியாக உள்ளது.. மரங்களை வெட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை விரைவில் அனுமதி
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்வதற்காக, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்கப்பட்ட, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (NDSA) தலைவர் அனில் ஜெயின் தலைமையிலான 7 பேர் கொண்ட புதிய கண்காணிப்புக் குழு இன்று தனது ஆய்வினை முடித்து, அணை பாதுகாப்பாக உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய அரசால் நியமிக்கப்பட்ட இந்தக் குழு, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி படகுத் துறைக்குச் சென்று, படகு மூலமாக அணை மற்றும் அதன் கட்டமைப்புகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டது.
இந்த புலன் ஆய்வில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாக நீர்வளத்துறைச் செயலாளர் ஜெயகாந்தன், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்ரமணியனும், கேரள அரசின் பிரதிநிதிகளாக நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிஸ்வந்த் சின்ஹா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் அங்கம் வகித்தனர். இந்தக் கண்காணிப்புக் குழுவானது முல்லைப் பெரியாறு பிரதான அணை, பேபி அணையின் மதகுகள், சுரங்கப் பகுதியின் நீர்மட்டம் மற்றும் கசிவு நீர் அளவுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் காரணிகள் குறித்து நுணுக்கமாகப் பரிசோதித்தது. ஆய்வைத் தொடர்ந்து, மதுரையில் உள்ள தனியார் விடுதியில் அனில் ஜெயின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையத் தலைவர் அனில் ஜெயின், "இன்று காலை அணையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தோம். அணையின் கருவிகள், நீர் இயந்திரங்கள் மற்றும் அணையின் அமைப்பை ஆய்வு செய்ததில், 2025ஆம் ஆண்டு பருவமழைக்குப் பிறகும் அணைக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அணை தற்போது நல்ல நிலையில், பாதுகாப்பாக உள்ளது" என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். மேலும், இன்றைய மேற்பார்வைக் குழு கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளையும் சந்தித்ததில், பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல பிரச்சினைகளில் சுமுகமான தீர்வு காணப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
அந்தச் சுமூகமான தீர்வுகளின்படி, அணை தளத்திற்கு வனப்பகுதி வழியாகச் சரியான அணுகல் பாதைக்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கக் கேரள அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல, தமிழ்நாடு அரசு கேரள அரசுடன் சில கருவிகளைப் பகிர்ந்து கொள்ளும் என்று முடிவு செய்யப்பட்டது. பேபி அணையில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி தொடர்பாக மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்க உள்ளதாகவும், இந்த அனுமதியை வழங்குவதற்கான நடைமுறையை விரைவுபடுத்த மத்திய சுற்றுச்சூழல் துறையை அணுக இரு மாநிலங்களும் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அத்துடன், முல்லைப் பெரியாறு அணைக்கு ரூல் கர்வ் முறைப்படி கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது என்றும் ஆணையத் தலைவர் அனில் ஜெயின் உறுதிப்படுத்தினார்.
